வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (09/05/2018)

கடைசி தொடர்பு:16:00 (09/05/2018)

தான் பிறந்த ஊர் மக்களின் நலனில் அக்கறையில்லாத தமிழக முதல்வர் - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சேலம் மாவட்டத்திலுள்ள செயில் ரெஃப்ரேக்டரி நிறுவனத்தின் மூடப்பட்ட சுரங்கம்  திறப்பதற்கு உடனடியாக தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

திருநாவுகரசர்

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் இல்லாத நிலையில், பல தொழில்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை நோக்கி இடம் பெயர்ந்துவருகின்றன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ரூபாய் 100 கோடி செலவில் நடத்திய பிறகும் எதிர்பார்த்த முதலீடுகளைச் செய்வதற்கு எந்தத் தொழில் முனைவோரும் முன்வரவில்லை. ஆனால், தமிழகத்தில் நடைபெற்றுவரும் தொழில்கள், நாளுக்கு நாள் நசிந்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அறிவிக்கையால், சேலம் மாவட்டத்திலுள்ள செயில் ரெஃப்ரேக்டரி நிறுவனத்தின் (Sail Refractory Company Limited, Salem) சுரங்கம், கடந்த 14 மாதங்களாக மூடப்பட்டிருப்பது குறித்து தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இச்சுரங்கப் பகுதிகளிலிருந்து வெள்ளைக்கல் எனப்படும் மேக்னசைட் கனிமம் தோண்டியெடுத்துப் பிரிக்கப்பட்டு இந்நிறுவன தொழிற்சாலையில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்திய உருக்காலைகளுக்குத் தேவையான தீக்கற்கள் (Fire Bricks) இதன்மூலம் உற்பத்திசெய்யப்படுகிறது. மேக்னசைட் சுரங்கப் பணியில் நேரடியாக 750 தொழிலாளர்களும், அது தொடர்பான பிற பணிகளில் 500 தொழிலாளர்களும் பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர்.  மத்திய அரசின் அறிவிக்கையால், ஜனவரி 2017ல் தமிழகத்தில் பலநூறு சுரங்கங்கள் மூடப்பட்டன. அவற்றுள் செயில் ரேஃப்ரேக்டரி சுரங்கமும் ஒன்றாகும். இதனால், ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வசூலித்து, அனுமதியை முறைப்படுத்துவதுகுறித்து தீர்வு காணுமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்ய அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக, சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கனிமத்தின் நூறு சதவிகித மதிப்பை அபராதமாக வசூலிக்க வேண்டுமென்று அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. 

 மத்திய அரசு கடிதத்தின்படி, தமிழ்நாடு அரசு சுரங்கம் மற்றும் புவியியல் துறையை இதுகுறித்து அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையொட்டி, தடையில்லா சான்றிதழ் வழங்கும்படியும் கோரப்பட்டது. தமிழக அரசு சுரங்கம் மற்றும் புவியியல் துறை சுரங்க உற்பத்திகுறித்த பதிவேடுகளைப் பரிசீலித்து, சரிபார்த்து, விதிப்படி இழப்பீட்டை ச் செலுத்த அறிவுரை வழங்க வேண்டும். உரிய இழப்பீட்டை நிறுவனம் செலுத்திடும் நிலையில் தடையில்லா சான்றிதழ் வழங்கி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை செயில் ரெஃப்ரேக்டரி  நிறுவன மனுவின் மீதான அடுத்த நடவடிக்கைகளைத் தொடங்கிட வழிவகுக்கும்.  தமிழ்நாடு அரசு, தனது தரப்பு பணிகளை விரைவுபடுத்தி, தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி, அந்தப் பகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டுள்ள முதலமைச்சர், இதுகுறித்து கடந்த 16 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நமக்கு மிகுந்த வியப்பைத் தருகிறது. எனவே, தமிழக அரசு இக்கோரிக்கைகுறித்து தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து,1500 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.