' துரைமுருகனே பெட்டர்!'  - ஸ்டாலினைக் கலவரப்படுத்தும் இருவர் #VikatanExclusive | Duraimurugan is far better , Stalin's position in question

வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (09/05/2018)

கடைசி தொடர்பு:14:30 (09/05/2018)

' துரைமுருகனே பெட்டர்!'  - ஸ்டாலினைக் கலவரப்படுத்தும் இருவர் #VikatanExclusive

அறிவாலயத்தில் நடக்கும் அதிகார மோதல்களால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின். ' தொண்டர்களுடன் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் தயங்குகிறார். கட்சியின் உயர்பதவியைக் கைப்பற்றுவதற்காக மா.செக்களை வளைக்கும் வேலைகளைச் சிலர் செய்து வருகின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

' துரைமுருகனே பெட்டர்!'  - ஸ்டாலினைக் கலவரப்படுத்தும் இருவர் #VikatanExclusive

அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி விவகாரத்தில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது தி.மு.க. அதேநேரம், அறிவாலயத்தில் நடக்கும் அதிகார மோதல்களால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின். ' தொண்டர்களுடன் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் தயங்குகிறார். கட்சியின் உயர்பதவியைக் கைப்பற்றுவதற்காக மா.செக்களை வளைக்கும் வேலைகளைச் சிலர் செய்து வருகின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு, கட்சியின் கட்டமைப்பை சீர்படுத்துவதற்காக தொண்டர்களிடம் குறைகேட்புக் கூட்டத்தை நடத்தினார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து மாவட்டவாரியாக தொண்டர்களை சந்தித்துப் பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் பலரும், அறிவாலயத்தின் மீதே புகார்களை அள்ளித் தெளித்தனர். 'தலைமைக் கழகத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா?' என அதிர்ந்து போனார் ஸ்டாலின். இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளான நிர்வாகிகளைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக, பத்து வழக்கறிஞர்களை மாவட்டங்களுக்கு அனுப்பினார். கட்சியின் புதுமுகங்களான இந்த வழக்கறிஞர்களும், மாவட்டங்களில் தீவிர விசாரணை நடத்தி, ஸ்டாலினுக்கு அறிக்கை அளித்தனர். ஆனாலும், மாவட்ட நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ' விரைவில் களையெடுப்பு நடக்கும்' எனக் கூறி, உடன்பிறப்புகளை உற்சாகத்தில் வைத்திருக்கிறார் ஸ்டாலின். 

' நடவடிக்கை எடுப்பதில் ஏன் இவ்வளவு தயக்கம்?' என்ற கேள்வியை தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். " செயல் தலைவர் நடத்திய இந்த ஆய்வை முக்கிய நிர்வாகிகள் சிலர் ரசிக்கவில்லை. தலைமை நிலைய முதன்மைச் செயலாளரான துரைமுருகனைக்கூட குறைகேட்புக் கூட்டத்தில் தவிர்த்தார் ஸ்டாலின். இருப்பினும், தொண்டர்களுடன் அமர்ந்து பேசுவது, உணவருந்துவது போன்ற செயல்பாடுகளால் கீழ்மட்ட நிர்வாகிகள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். தொண்டர்களுடனான ஆய்வும் அதனைத் தொடர்ந்த விசாரணைகளும் நிறைவடைந்தாலும், இதன்பேரில் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன" என விவரித்தவர், " காவிரி விவகாரத்தில், எங்களது போராட்டத்தால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம். இந்தப் போராட்டங்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகம் பெருகியுள்ளது. தங்களை நிரூபித்துக்கொள்ள, இந்தப் போராட்டக் களங்களை மாவட்ட நிர்வாகிகள் பயன்படுத்திக் கொண்டனர். ' இந்தநேரத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுத்துவிட வேண்டாம்' என நினைக்கிறார் ஸ்டாலின். 

தொண்டர்களுடன் கலந்தாய்வு

ஆய்வுக் கூட்டத்தின் தொடக்கத்தில், தொண்டர்களைத் தனித்தனியாக அமர வைத்துக் குறைகளைக் கேட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்டு, ஏராளமான புகார்களைத் தொண்டர்கள் வாசித்தனர். இதனால் பிரச்னை வருவதைக் கண்டு, கும்பலாக அமர வைத்துக் குறைகளைக் கேட்டார். இதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, ' யாரும் பேச வேண்டாம். நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். இறுதியாக, ' புகாரை எழுதிப் பெட்டியில் போடுங்கள். விசாரணை நடத்த ஆட்கள் வருவார்கள்' என்றார். 'இப்போது என்ன செய்வது?' என்ற குழப்பத்தில் இருக்கிறார். இது ஒரு காரணமாக இருந்தாலும், வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகளால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் ஸ்டாலின். அவர்களது கட்டுப்பாட்டில்தான் கட்சியே இயங்குவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறார்கள். முதலாவதாக, நிதி விவகாரங்களில் வலுவாக உள்ள அந்த நபர், மாவட்டச் செயலாளராக மட்டும்தான் இருக்கிறார். அவர் வீட்டில் தினமும் பத்து மாவட்டச் செயலாளர்களைப் பார்க்கலாம். அடுத்ததாக, சர்ச்சையில் அடிபட்டு மீண்ட நிர்வாகி ஒருவர். இவர்கள் இருவரின் வீட்டுக்கும்தான் மா.செக்கள் படையெடுக்கிறார்கள். ' பொதுச் செயலாளர் பதவி உனக்கு...பொருளாளர் பதவி எனக்கு' என முடிவெடுத்துவிட்டு களப்பணி செய்கிறார்கள். ஸ்டாலின் செல்லும் வாகனங்களிலும் இவர்கள் இருவரும் ஏறிக்கொள்கின்றனர். ' நாங்கள் சொல்வதைத்தான் தளபதி கேட்கிறார்' என கட்சி நிர்வாகிகளிடம் நிறுவ முயல்கின்றனர். 

இதில், பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற நினைக்கும் அந்த நிர்வாகி, 'தனக்கு எதிராக திருச்சி புள்ளி இருப்பார்' எனக் கருதிக் கொண்டு, அவரை வைத்தே விழா ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மேடையிலேயே ஆனந்தக் கண்ணீர் வடித்தார் திருச்சி புள்ளி. ' நான் பொதுச் செயலாளர் ஆவதற்கு திருச்சி புள்ளி எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்' என உறுதியான முடிவுக்கு வந்துவிட்டார் அந்த நிர்வாகி. இதையெல்லாம் கவனித்து வரும் செயல் தலைவர், ' இவர்களது ஆட்டம் சரியில்லை. மாவட்டச் செயலாளர்களையே பர்சேஸ் செய்கிறார்களா?' எனக் கொதிப்பைக் காட்டினார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்குக் கட்சியில் குடும்பத்தின் தலையீடு அதிகரித்துவிட்டது. இவர்கள் இருவரையும் ஒதுக்கும்விதமாக, துரைமுருகனிடமே ஆலோசனைக் கேட்கத் தொடங்கிவிட்டார் ஸ்டாலின். நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும்கூட, உடல்நலமில்லாமல் இருந்த துரைமுருகனைத் தூக்கிக் கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டனர். இதற்குக் காரணம், ' அவர்கள் இருவரும் பக்கத்தில் வந்து அமர்ந்துவிடக் கூடாது' என்பதால்தான். தலைமையில் உள்ள நிர்வாகிகளில் சிலரை நம்புவதற்கு செயல் தலைவர் தயாராக இல்லை. தொண்டர்களைத்தான் மிகப் பெரிய பலமாக நினைக்கிறார். எனவேதான், குறைகேட்பு கூட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் அவர் தயக்கம் காட்டுகிறார். கட்சிக்குள் நடக்கும் அதிகார மோதல்களால் மிகுந்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார் செயல் தலைவர்" என்றார் விரிவாக. 


டிரெண்டிங் @ விகடன்