வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (09/05/2018)

கடைசி தொடர்பு:14:51 (09/05/2018)

`சந்தானம் விசாரணைக்குத் தடையில்லை' - நிர்மலா தேவி விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு!

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை ஆளுநர் நியமித்த சந்தானம் குழு விசாரிக்க தடையில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

சந்தானம்

 

மாட்டு இறைச்சித் தடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி தற்போது உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ``அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் உரையாடல் தொடர்பான புகார்களை ஆளுநரால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் கமிஷன் விசாரிப்பதற்கு உரிய அதிகாரம் கிடையாது. மாணவிகள் வழங்கிய புகார்களை கல்லூரி, பல்கலைக்கழகத்தில் உள்ள `உள்ளூர் புகார் கமிட்டி' தான் விசாரிக்க வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு விதிகளில் உள்ளது. இதில் தொடர்புடைய கல்லூரி பேராசிரியர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதால், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுதான் விசாரிக்க வேண்டும். எனவே, ஆளுநர் நியமித்த சந்தானம் கமிட்டி விசாரணை செல்லாது என உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கோவிந்தராஜன், சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை ஆளுநர் நியமித்த சந்தானம் குழு விசாரிக்கத் தடையில்லை எனக் கூறிய நீதிபதிகள் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் குழுவை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என உத்தரவிட்டனர். மேலும் `உள்ளூர் புகார் கமிட்டி' என்ற மாவட்ட உள்ளூர் குழு அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனக் கூறி வழக்கினை முடித்துவைத்தனர்.