வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (09/05/2018)

கடைசி தொடர்பு:15:20 (09/05/2018)

`எல்லோரும் எம்.ஜி.ஆராக முடியாது' - `காலா'வை விமர்சித்த ஜெயக்குமார்..!

`காலா' படத்தின் பாடல்கள் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

`கபாலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரஜினிகாந்த் - இரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம்தான் காலா. தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் விதமாகக் கபாலி படத்தில் காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றன. ரஜினியை வைத்து இந்த வசனங்கள் பேசப்பட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் தற்போது உருவாகியுள்ள `காலா’ படத்திலும் தீண்டாமைக்கு எதிராகக் கருத்துகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கிடையே காலா படத்தின் பாடல்களும் இன்று வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ரஜினியின் காலா படம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர் , ``எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் மது, புகை பிடித்தது கிடையாது. தமிழகத்தில் கலவரத்தை யார் தூண்ட நினைத்தாலும் அரசு அதை ஏற்காது. அந்த வகையில் காலா படத்தின் பாடல்கள் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காலா போன்ற காளான்கள் காணாமல் போகும். சுயநலத்துக்காக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த முயலக் கூடாது. எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக நினைத்தால் அது முடியாது" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க