மணல் மேவி காணப்படும் ஆற்றாங்கரை முகத்துவாரம் - கேள்விக்குறியாகும் மீனவர்கள் வாழ்வாதாரம்!

வைகையின் முகத்துவாரமாகத் திகழும் ஆற்றாங்கரை கடற்கரைப் பகுதி பல்வேறு காரணங்களால் மணல் மண்டி கிடப்பதால் மீன்கள் உயிரிழந்து வருவதும், அதை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அவலமும் நேர்ந்து வருகிறது.

வைகையின் முகத்துவாரமாகத் திகழும் ஆற்றாங்கரை கடற்கரைப் பகுதி பல்வேறு காரணங்களால் மணல் மண்டிக் கிடப்பதால் மீன்கள் உயிரிழந்து வருவதும், அதை நம்பி வாழ்க்கை நடத்திவரும் மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அவலமும் நேர்ந்து வருகிறது.

ஆற்றாங்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை கடற்கரைப் பகுதி வைகை நதியின் முகத்துவாரமாக இருந்து வருகிறது. மழைக் காலங்களின்போது ராமநாதபுரத்துக்குத் திறந்துவிடப்படும் வைகை நீர் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் நிறைந்த பின், எஞ்சியிருக்கும் உபரி நீர் இங்குதான் கடலில் கலக்கிறது. வைகையின் முகத்துவாரமாக விளங்குவதால் ராமநாதபுரத்துக்கு 'முகவை' என்ற அடைமொழி பெயரும் உண்டு. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ராமநாதபுரம் பகுதியில் போதிய மழை இல்லாமல் பொய்த்துப்போய்விட்டது. வைகை அணையில் நீர் இருந்தும் திறக்கப்படுவதில்லை. 

இதனால் நீர் ஓட வேண்டிய ஓடைப் பகுதிகள் மணல் குவியலாக மாறி அவ்வப்போது வரும் நீரையும் கடலில் கலக்கவிடாமல் தடுத்து வருகிறது. இதனால் கடல்நீரில் உள்ள உப்புத்தன்மை அதிகரித்து கடல் வாழ் உயிரினங்களான மீன்கள், இறால்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி குறைந்து வருவதுடன், இருக்கும் மீன்களும் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக இறந்து கரை ஒதுங்குகின்றன. இந்நிலையில் ஆற்றாங்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணைகளின் ரசாயனம் கலந்த கழிவு நீரும் கடலில் திறந்துவிடப்படுவதால் கடல் வாழ் உயிரினங்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

இது தவிர ஆற்றாங்கரை கடலோர பகுதிகளில் உள்ள மீன்களை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் மீனவர்கள் முகத்துவார பகுதிகளில் மேவியுள்ள மணலால் நாட்டுப்படகு மற்றும் சிறு வல்லம் போன்ற படகுகளைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், நன்னீர் கடலுக்குச் செல்ல முடியாத நிலை, இறால் பண்ணைக் கழிவு நீர் கடலில் கலப்பு போன்றவற்றால் மீன்கள் பெருக்கமும் குறைந்து வருகிறது. இது குறித்து அமைச்சர் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மீனவர்கள் முறையிட்டனர். 

இதையடுத்து ஆற்றாங்கரை முகத்துவாரத்தைத் தூர் வாரி சீரமைக்க மீன்வளைத்துறை சார்பில் ரூ.80 லட்சத்துக்குத் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட திட்ட மதிப்பீடு கடந்த 6 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டதால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. அமைச்சர் மணிகண்டனின் சொந்த தொகுதியில் உள்ள ஆற்றாங்கரை முகத்துவாரத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!