வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (09/05/2018)

கடைசி தொடர்பு:17:40 (09/05/2018)

குடும்பத்துடன் மறியலில் ஈடுபட்ட என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் 41 பேரும் குடும்பத்துடன் முதல் சுரங்க விரிவாக்கத்திற்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில்ஈடுப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பணி மாற்றம், பணி நாள்கள் குறைப்பு ஆகியவற்றைக் கண்டித்து என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மறியலில் ஈடுபட்டனர்.

என்எல்சி

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் உள்ள முதல் சுரங்க விரிவாக்கத்தில் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் வீடு, நிலம் கொடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இதில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 41 தொழிலாளர்கள் வேறு இடத்துக்குப் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்களுக்கு மாதத்துக்கு 26 நாள்கள் பணி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மாதத்துக்கு 15 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத் தொழிலாளர் 41 பேரும் முன்பு செய்து வந்த பணி வேறு. இப்போது வழங்கப்படும் பணி முற்றிலும் புதியதாகவும் கடுமையாகவும் இருப்பதால் தங்களுக்கு முதல் சுரங்க விரிவாக்கத்திலேயே பழைய பணியே வழங்க வேண்டும் எனக் கூறி கடந்த 15 நாள்களுக்கு முதல் சுரங்க விரிவாக்க அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் பாட்டிலுடன்  போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் உடன் நடவடிக்கை எடுப்பதாக என்.எல்.சி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று காலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் 41 பேரும் குடும்பத்துடன் முதல் சுரங்க விரிவாக்கத்துக்குச் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் காலை 6 மணி பணிக்குச் செல்ல வேண்டிய நிரந்தர செயலாளரும் பணிக்குச் செல்ல முடியவில்லை. இது குறித்து தகவலறிந்த என்.எல்.சி மனித வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் வரும் 14-ம் தேதி திங்கள்கிழமை நிர்வாகத்துடன் பேசித் தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.