`நிவாரணத்தை ரூ.10,000-மாக உயர்த்தவும்' - தமிழ் மீனவர் கூட்டமைப்பு கோரிக்கை

விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை விழுங்கிடும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை த.மீ.கூ வன்மையாகக் கண்டிக்கிறது.

மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கும் நிவாரணத் தொகை 5,000-லிருந்து 10,000-மாக உயர்த்த வேண்டும் எனத் தமிழ் மீனவர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணி ராமசுப்பு அரங்கில் தமிழ் மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரஜினி, தமிழ்நாடு மக்கள் ஜனநாயகக் கட்சி மதுரை மாவட்டச் செயலாளர் சாகுல்ஹமீது, ஆதித்தமிழர் கட்சியைச் சார்ந்த ஆதவன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது ரஜினி பேசுகையில், "ஒகி புயல் பாதிப்புக்குப் பின், மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு நிவாரணம் போதுமான அளவு வழங்கப்படவில்லை. எனவே,  அதை உயர்ந்த வேண்டும். தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண தொகையை 10,000 ஆக உயர்த்த வேண்டும். விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை விழுங்கிடும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

டீசல், பெட்ரோல் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மீனவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். கடல் அரிப்பை தேசியப் பேரிடராக அறிவித்திட வேண்டும். கடலோர மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து கடற்பஞ்சாயத்துகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற தனி தொகுதிகள் மீனவர்களுக்கென்று ஏற்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் எஸ்.சி \ எஸ்.டி சட்டத்தை நீர்த்து போகும்படி செய்த திருத்தங்களுக்கு மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்வதோடு நின்றுவிடாமல் நல்ல திறமையான வழக்கறிஞர்கள் வைத்து வாதாடி எஸ்.சி / எஸ்.டி சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்'' என்றார். சாகுல் ஹமீது கூறுகையில், ''சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!