பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் திருட்டு? - போலீஸார் விசாரணை

சர்ச்சைக்குரிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியின் வீட்டை உடைத்து நடந்துள்ள திருட்டுச் சம்பவம், மீண்டும் இந்த விவகாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நிர்மலா தேவி வீடு

மாணவிகளுக்குத் தவறாக வழிகாட்டிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 16 ம் தேதி அருப்புக்கோட்டையில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி, போலீஸ் விசாரணைக்குப் பின் சிறையில் இருந்து வருகிறார். நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர் வீட்டை சி.பி.சி.ஐ.டி.யினர் சோதனையிட்டு செல்போன், கம்ப்யூட்டர் உட்பட பல ஆவணங்களை எடுத்துச் சென்றனர். பின்பு அவரது வீட்டுக்குச் சீல் வைக்கப்பட்டது. அதற்குப் பின் சீலை போலீஸ் அகற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அருப்புக்கோட்டை காவியன் நகரில் இருக்கும் நிர்மலா தேவி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கூறினர். உடனே டி.எஸ்.பி. தனபால் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது வழக்கமான தொழில்முறை திருடர்கள் நடத்திய திருட்டா அல்லது நிர்மலாதேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நடத்திய திருட்டா என்று போலீஸ் விசாரித்து வருகிறது. பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று விருதுநகர் நீதிமன்றத்துக்கு நிர்மலா தேவி ஆஜர் படுத்த அழைத்து வந்த நாளிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!