மன்னார்குடி வங்கிக் கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸ் புது யுக்தி! | Police team uses new technology to nap Mannargudi bank theft criminals

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (09/05/2018)

கடைசி தொடர்பு:19:00 (09/05/2018)

மன்னார்குடி வங்கிக் கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸ் புது யுக்தி!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மெர்க்கன்டைல் வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காண வங்கி ஊழியர்களின் உதவியோடு லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மூலம் மர்ம நபர்களின் உருவங்களை வரையும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார்குடியில் கொள்ளையடிக்கப்பட்ட வங்கி

மன்னார்குடி அருகே உள்ள அசேஷத்திரத்தில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொள்ளையர்களை அடையாளம் காண, வங்கி ஊழியர்களின் உதவியோடு நவீன வியூகத்தில் இறங்கியிருக்கிறார்கள். நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் மெர்க்கன்டைல் வங்கிக்குள் நுழைந்த மர்மக் கும்பல் ஒன்று, வங்கி ஊழியர்களை மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு 9 லட்சம் ரூபாய் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்நிலையில் காவல்துறை திருச்சி மண்டல ஐ.ஜி. வரதராஜன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களைப் பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் முயற்சி நடைபெற்று வருகிறது.

வங்கி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் உள்ள பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை அடையாளம் காண வங்கி ஊழியர்களின் உதவியோடு லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மூலம் மர்ம நபர்களின் உருவங்களை வரையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். விரைவில் கொள்ளையர்களைப் பிடித்து விடுவோம் எனக் காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.