சென்னைப் பெண்ணுக்குத் திருவண்ணாமலையில் நேர்ந்த கொடூரம்! விபரீதமான ஊர்மக்களின் செயல்!

திருவண்ணாமலை அருகே குழந்தையைக் கடத்த வந்ததாகக் கூறி மூதாட்டி ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர்கள் ருக்குமணி, சந்திரசேகரன், மோகன்குமார், வெங்கடேசன், கஜேந்திரன் ஆகியோர். இவர்களில் ருக்குமணி வயதானவர். சந்திரசேகரன் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவரும் மலேசியாவில் செட்டில் ஆனவர்கள். சமீபத்தில் சென்னை வந்த இவர்கள் இன்று குலதெய்வம் கோயிலான திருவண்ணாமலை போளூர் அருகே உள்ள அத்திமூர் ரேணுகாம்பாள் கோயிலுக்கு வந்தனர். அப்போது, கோயிலில் அமர்ந்து மலேசியாவில் இருந்து கொண்டுவந்த சாக்லெட்டை மூதாட்டி ருக்குமணி சாப்பிட்டுள்ளார். சாப்பிடும்போது கோயிலில் விளையாடிக்கொண்டிருந்த அப்பகுதி குழந்தைகள் அவரைப் பார்த்துள்ளனர். அதனால் மூதாட்டி அந்தக் குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்துக் கண்ணத்தைக் கிள்ளியுள்ளார். 

இதைப் பார்த்த அந்த ஊர் மக்கள், குழந்தை கடத்த வந்ததாகக் கூறி மூதாட்டியை அடிக்கச் சென்றுள்ளனர். நிலைமை விபரீதமடைவதை உணர்ந்த ஐந்து பேரும் காரில் ஏறிச் செல்ல முயன்றனர். ஆனால், அந்தக் கிராம மக்கள் விடாமல் துரத்திச்சென்று காரை மடக்கிப் பிடித்து கடுமையாகத் தாக்கியதுடன், காரையும் உடைத்துச் சேதப்படுத்தினர். அவர்கள் சொல்ல வந்ததைக்கூட கேட்காமல் அடித்து உதைத்தனர். இதில் ருக்குமணி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் பலத்த காயங்களுடன் திருவண்ணாமலை மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!