வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (09/05/2018)

கடைசி தொடர்பு:21:20 (09/05/2018)

`தடை காலத்தால் வரத்து குறைவு!’ - உச்சத்தில் மீன் விலை

தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து மீன் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படும். இந்த நாள்களில் மீனவர்கள் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்க மாட்டார்கள். இந்த ஆண்டும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது. மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான நாகை மாவட்டம், பூம்புகார், வானகிரி, திருமுல்லை வாசல் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஆனால், இந்நாள்களில் சிறிய வகை கட்டுமரங்கள், படகுகள் மூலம் கடலில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று மீன் பிடிக்க அனுமதி உள்ளது.

எனவே, மீனவர்கள் சிறிய வகை கட்டுமரங்கள் மற்றும் பைபர் படகுகள் மூலம் சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை செல்ல மட்டுமே அனுமதி உள்ளதால் மிகக் குறைந்த அளவு மீன்களே வலைகளில் சிக்குகின்றன. மேலும், பெரிய வகை மீன்கள் ஆழ்கடல் பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் என்பதால் தற்போது சிறிய வகை மீன்களை மட்டுமே பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களின் விலை முன்பு இருந்ததைக் காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிக விலை கொடுத்து மீன் வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது பற்றி நாகை மாவட்டம், பூம்புகார் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரிகளிடம் கேட்டபோது, `இப்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கி நடந்துகொண்டிருப்பதால் மீன் வரத்து மிகவும் குறைந்துள்ளது. மேலும், குறிப்பிட்ட சிறிய வகை மீன்களே கிடைக்கின்றன. இதனால் மற்ற மீன்களைப் பிற பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளதால் மீன்களை அதிக விலைக்கு ஏலம் எடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே தற்போது மீன்களின் விலை உயர்ந்துள்ளது" என்றனர்.

கடந்த மாதங்களில் 100 ரூபாய்க்கு விற்ற மீன்கள் தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. கடலிலிருந்து குறைந்த அளவு இறால்களே கிடைப்பதால் முன்பு 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கைப்பிடி இறால் இப்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகிது. விலை உயர்வு காரணமாகப் பொது மக்கள் குறைந்த அளவு மீன்களையே வாங்கிச் செல்கின்றனர்.