வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (09/05/2018)

கடைசி தொடர்பு:20:00 (09/05/2018)

வேட்டையாடப்படும் மயில்கள்... மெத்தனம் காட்டும் வனத்துறையினர்

 திருவாடானை தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் காடுகளில் வாழும் தேசிய பறவையான  மயில்கள் சமூக விரோதிகளால் வேட்டையாடப்படுவதைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாடானை தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் காடுகளில் வாழும் தேசியப் பறவையான மயில்களை சமூக விரோதிகளால் வேட்டையாடப்படுவதைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயில் இறக்கைகள்

திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட திருவாடானை பகுதிகளில் நீர்நிலை கண்மாய்கள் அதிகமாக உள்ளன. இக்கண்மாயை ஒட்டியுள்ள பகுதிகள் காடுகள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இதனால் கடந்த பல வருடங்களாக இங்கு மயில்கள் கூட்டம் கூட்டமாக அதிகளவு காணப்படுகிறது. இதேபோல் மான்களும் இப்பகுதிகளில் அதிக அளவில் உள்ளது. காடுகளையும் கண்மாய்களையும் நம்பி உயிர் வாழ்ந்து வரும் மயில் மற்றும் மான்களை  சமூக விரோதிகள் சட்டத்துக்கு புறம்பாக வேட்டையாடி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மான்கள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் வேட்டையாடப்பட்டு இறந்துகிடந்தது.

இந்நிலையில், மயில் கறி சாப்பிட்டால் மனிதர்களின் மூட்டு வலியைக் குணமாகும் எனக் கூறி சமூக விரோதிகள் சிலர் மயில்களை வேட்டையாடி வருகின்றனர். ''பரந்து விரிந்து கிடக்கும் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் தேசியப் பறவையான மயில்கள் வேட்டையாடுப்படுவதைத் தடுக்க வன உயிரின பாதுகாவலர்கள் பணியாற்றி வரும் நிலையில், இது போன்ற வேட்டை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மான் மற்றும் மயில்களை வேட்டையாடும் சமூக விரோதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வனத்துறையினர் மெத்தனமாகச் செயல்படுகின்றனர்'' எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் மாவட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து மயில் மற்றும் மான்களை வேட்டையாடப்படுவதிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.