Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``தமிழ் இலக்கியப் பாரம்பர்யத்துக்கு அறிவொளியின் மரணம் பேரிழப்பு!’’ - கு.ஞானசம்பந்தன்

நெற்றியில் பட்டையாக, அழகாகத் திருநீறு; நடுவே செக்கச் சிவப்பு நிறத்தில், வட்டவடிவில் ஒரு குங்குமப் பொட்டு; மார்புவரை நீண்ட அழகிய வெண்தாடி; ஒளிபொருந்திய முகம் இவைதான் மறைந்த 81 வயது தமிழறிஞர் அறிவொளியின் அடையாளம். தமிழறிஞர் மட்டுமல்ல... மிகச்சிறந்த சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், மாற்று மருத்துவ வல்லுநர், தேர்ந்த ஆன்மிக ஞானம் உள்ளவர், ஆன்மிக இலக்கியங்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி... இப்படி பன்முகங்களைக் கொண்டவர் அ.அறிவொளி!

அறிவொளி

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த சிக்கல்தான் அறிவொளியின் சொந்த ஊர். இயற்பெயர் ஞானப்பிரகாசம். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பூம்புகார் கல்லூரியிலும் தமிழ்த்துறைப் பேராசியராகப் பணியாற்றியிருக்கிறார். டென்மார்க்-கின் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

புற்றுநோய்க்குத் தமிழ் மருத்துவத்தில் தீர்வுகளை முன்வைத்தவர். உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தைக் கொண்டு செல்வதில் தீவிர முனைப்பு காட்டியவர். இதுவரை 120-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நாடு முழுக்கவுள்ள பழைமையான கோயில்களை ஆய்வு செய்து, இவர் எழுதிய நூல் மிகப் பிரசித்தி பெற்றது. `பெரியார் செய்ததும், செய்யத் தவறியதும்’ என்ற இவரது நூல் எத்தனையோ வாசகர்களின் கவனம் பெற்றது.

வழக்கமான, தட்டையான சொற்பொழிவு முறைகளைத் தகர்த்துவிட்டு தன் சுவாரஸ்யமான, ஆழமான பேச்சாற்றலால் பலரையும் தன் பக்கம் ஈர்த்தவர். 1986-ம் ஆண்டு மேடைகளில் `வழக்காடு மன்றம்’என்ற வடிவத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் அறிவொளிதான். `ஆய்வுறைத் திலகம்’, `கபிலவாணர்’ போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அறிவொளி

அரசியல், சமயம், சமூகம், இலக்கியம்... என அனைத்துத் துறைகளிலும் கைதேர்ந்தவர். எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர். பேசுகிற அத்தனை மணி நேரமும் நம்மை அங்கிங்கு நகராமல் ரசிக்கவைக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர். உடல்நலக்குறைவால் திருச்சியில் உள்ள, தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்றிரவு காலமானார். தமிழறிஞர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், எனப் பலதரப்பினரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

``ஆழமான படிப்பாளி, மிகச் சிறந்த பேச்சாளர், வினாக்கள் மூலமாக தன் வாதங்களை முன்வைத்து பட்டிமன்றங்களில் ஒரு புதிய பாணியை உருவாக்கியவர் அறிவொளி. பொதுமக்கள் மத்தியில் அவருடைய பேச்சு பாணிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. சைவ, சமய இலக்கியங்களிலும் வள்ளலாரியத்திலும் ஆழமான ஞானம் கொண்டவர். எந்த இலக்கியத்தையும் அதன் தரம் குறையாமல், எளிமையாக விளக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர். இந்திராகாந்தி சிறைசென்ற போது `நடந்தது, நடந்தேவிட்டது’ என்ற புத்தகத்தை எழுதினார். அதெல்லாம் எந்தத் தமிழ்ப் பேராசியரும் சிந்திக்க முடியாத களம். அவரைப் போன்றவர்களால் தமிழுக்கும் பெருமை; எங்களைப் போன்ற பேராசியர்களுக்கும் பெருமை. கும்பகர்ணனைப் பற்றிய ஓர் ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்... மிகச் சிறந்த நூல் அது. திருவாசகத்துக்கும் மிகச்சிறந்த உரையொன்றை எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறார். பழகுவதற்கு இனியவர். அவர் தமிழர்களால் என்றென்றும் நினைக்கப்பட, பாராட்டப்பட வேண்டியவர். அவர் உயிரோடிருந்த காலத்தில் அவருக்குப் பெரிய அளவுக்கு அங்கீகாரமோ, பாராட்டோ கிடைத்த மாதிரி தெரியவில்லை’’ என்கிறார் பட்டிமன்ற நடுவர், பேராசிரியர் சாலமன் பாப்பையா.

சாலமன் பாப்பையா

``தமிழ்நாட்டின் இலக்கியப் பாரம்பர்யத்துக்கு இது ஒரு பேரிழப்பு. அவரின் நகைச்சுவையான பேச்சுகள், அலங்காரமில்லாமல் வெகு இயல்பாக இருக்கும். கல்லூரியில் படிக்கும் காலங்களில் அவரை அழைத்து வந்து பேசவைத்திருக்கிறேன். என்னைப் போன்ற பல பேச்சாளர்கள் அவரைப் போன்ற முன்னோடிகளால்தான் மேடைக்கு வந்தோம். நாளடைவில் அவரின் அணியில், ஒரே மேடையில் பேசியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். 2006-ம் ஆண்டில் அவருடன் அமெரிக்காவில் பதினைந்து நாள்கள் ஒன்றாகத் தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எப்போதும் பூஜை செய்துகொண்டே இருப்பார். ஒருமுறை நான், என்னுடைய ஆசிரியர்கு.ஞானசம்பந்தன் தொ.பரமசிவத்துக்கு உடல்நிலை சரியில்லை என்ற மன வருத்தத்தில் இருந்தேன். என் வருத்தத்தைக் கண்ட அவர் , என்னவென்று விசாரித்தார். நான் நிலையைச் சொன்னேன். உடனடியாக ஒரு சக்தி பூஜை செய்தார். பூஜையை முடித்துவிட்டு, `அவருக்கு ஏதும் ஆகாது, நன்றாக இருப்பார்’ என்று சொன்னார். அவர் சொன்னபடி, இன்றுவரை அவர் நன்றாக இருக்கிறார். அந்தச் சம்பவத்தின்போதுதான் அவரின் ஆன்மிக ஞானத்தைத் தெரிந்துகொண்டேன்.

அதைப்போலவே மருத்துவத்திலும் ஆழ்ந்த அறிவுகொண்டவர். ஜோதிடத்தில் வல்லவர்; சம்ஸ்கிருத மொழியிலும் கைதேர்ந்தவர்; இயற்கை வேளாண்மை பற்றியும் அறிந்துவைத்திருந்தார். முறைப்படி தமிழ் பயின்று, இலக்கியத்தை முறைப்படி உலகுக்குக் கொண்டு சேர்த்தவர். மேடை நாகரிகம் அறிந்து பேசக்கூடியவர். 'எதில் எது இருக்கிறதோ அதில் அது இல்லை' என்று திடீரென்று ஒரு வாசகத்தைச் சொல்வார். `இது எப்படி?’ என்று நாம் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அதற்கு அழகான விளக்கம் கொடுத்துப் புரியவைப்பார்.

`சாப்பாட்டை வாய்க்கருகே கொண்டு செல்பவன் மனிதன், சாப்பாட்டுக்கருகே வாயைக் கொண்டு செல்வது மிருகம்’ என்பார். இதுபோன்ற ஏராளமான அழகிய சொல்லாடலைப் பயன்படுத்துவார். அவருடன் பயணிப்பது மிக சுவாரஸ்யமான அனுபவம். எந்தக் கடினமான சூழலையும், நகைச்சுவையுணர்வோடு அணுகக்கூடியவர். எனக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே பேரிழப்பு அவர் மரணம்" என்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்.

அமரர் அறிவொளியின் பாணியிலே நாம் சொல்ல வேண்டுமென்றால், `இன்று அவர் உயிரோடு இல்லை; ஆனால் அனைவரின் உள்ளங்களிலும் அவர் நிறைந்திருக்கிறார்.’

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement