வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (09/05/2018)

கடைசி தொடர்பு:21:00 (09/05/2018)

`தாமிரபரணி இருந்தும் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கல' - கலெக்டர் ஆபீஸூக்கு குடங்களுடன் வந்த பெண்கள்

குடிநீர் கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர். 

குடிநீர் கோரி முற்றுகை

நெல்லை மாவட்டம் வன்னிகோனந்தல் கிராமத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளைக் கிணறு மூலமாக மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .இந்தத் தண்ணீரும் முறையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேவேளை, வன்னிக்கோனந்தல் கிராமத்தின் வழியாகத் தாமிரபரணியிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக விருதுநகர் மாவட்டம் வரையிலும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. 

தங்களது கிராமத்தைத் தாண்டி பிற மாவட்டத்து மக்கள் பயனடையும் வகையில் குடிநீர் கொண்டு செல்லப்படும் நிலையில் தங்களுக்கு விநியோகிக்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால், தங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 

அதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு காலிக் குடங்களுடன் வந்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `கடந்த பல ஆண்டுகளாகக் குடிதண்ணீருக்கு கஷ்டப்பட்டு வருகிறோம், எங்கள் ஊர் வழியாகத் தாமிரபரணி கூட்டுக் குடிதண்ணீர் திட்டக் குழாய்கள் சென்றும் எங்களுக்குத் தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படவில்லை. ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ எனத் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க