'தாயை காப்பாற்றிய என்னால் உன்னை காப்பற்ற முடியவில்லையே'- திருமணியின் சகோதரி கண்ணீர்

காஷ்மீர் கல்வீச்சில் பலியான இளைஞரின் சகோதரி கதறி அழுதது காண்போரை உருக்குவதாக இருந்தது.

'தாயை காப்பாற்றிய என்னால் உன்னை காப்பற்ற முடியவில்லையே'- திருமணியின் சகோதரி கண்ணீர்

காஷ்மீர் கல்வீச்சு தமிழக இளைஞரின் உயிரையும் குடித்திருக்கிறது. சென்னை ஆவடி டாங்க் தொழிற்சாலையில் பணிபுரியும் ராஜவேல்- செல்வி தம்பதிக்கு ரவிக்குமார், திருமணி செல்வன் என்ற  இரு மகன்களும் சங்கீதா என்ற மகளும் உண்டு. ராஜவேல் குடும்பத்தாருக்கு காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டுமென்பது நீண்டநாள்  கனவு. இதற்காக நீண்ட நாள்களாக தயாராகி வந்துள்ளனர். கடந்த 4-ம் தேதி ரவிக்குமாரை தவிர அனைவரும் டெல்லி வழியாக காஷ்மீர் சென்றுள்ளனர்.

கடந்த 7-ம் தேதி  காலை 10.30 மணியளவில் காஷ்மீரில் புல்காம் மாவட்டத்தில் உள்ள குல்மார்க் பகுதியை சுற்றி பார்க்க ராஜவேல் குடும்பத்தினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கலவரக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். ராஜவேல் குடும்பத்தினர் சென்ற வாகனத்தை நோக்கியும் கற்களை வீசினர்.  இதில்,  ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த திருமணி செல்வனின் நெற்றி, தலையை கற்கள் தாக்கின. இதனால், கோமா நிலைக்கு சென்ற, திருமணிச்செல்வன் ஸ்ரீநகர் மருத்துவமனையில் இரவு 8.30 மணியளவில் நினைவு திரும்பாமலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார்.

காஷ்மீர் கல்வீச்சுக்கு பலியான தமிழக இளைஞர்

சென்னைக்கு கொண்டு வரப்பட்ட திருமணியின்  உடலை பார்த்து உறவினர்களும் நண்பர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. கல்வீச்சு நடந்தபோது, தந்தை ராஜவேல், மகனை பார்த்து கத்தியுள்ளார். திருமணிசெல்வன் காதில் ஹெட் போன் போட்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததால், தந்தையின் எச்சரிக்கையை கவனிக்கத் தவறிவிட்டார். தந்தை கத்தியதை கேட்ட மகள் சங்கீதா தலை குனிந்ததோடு, தாயார் செல்வியின் தலையை பிடித்து இழுத்ததால் இருவரும் உயிர் தப்பினர். சகோதரரின் உடலை பார்த்து, ''அம்மாவைபோல உன் தலையையும் நான் இழுத்திருக்கக் கூடாதா ? என்று சங்கீதா கண்ணீர் விட்டு அழுதது காண்போரை உருக வைத்தது. 

25 வயதான திருமணிச்வெல்வன் பி.காம் படித்து விட்டு அக்ஸெஞ்சர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். அமைதியான சுபாவம் கொண்டவர். இனிமையாக பழகக் கூடியவர் என்று நண்பர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

'தமிழக இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தால் வெட்கி தலை குனிந்து நிற்கிறேன்' என்று காஷ்மீர் முதல்வர் முஃப்தி மெகபூபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவும் கண்டனம் வெளியிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!