'தலைமை வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார்'- சொல்கிறார் குருமூர்த்தி!

கர்நாடகாவில் கலவரம் ஏற்படும் என்பதால் தான் நீதிமன்றத்தில் தேர்தலுக்கு பிறகு காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். 

துக்ளக் இதழ் ஆசிரியரும், பா.ஜ.க ஆதரவாளருமான ஆடிட்டர் குருமூர்த்தி சென்னை கிண்டியில் நடந்த பிக்கி ( FICCI) மீட்டிங்கில் கலந்துகொண்டார். கருத்தரங்குக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழக முதல்வரைச் சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கினால், கர்நாடக முதல்வரும் சந்திக்க நேரம் கேட்பார். முதல்வர்களைச் சந்திப்பது தான் பிரதமர் வேலையா?. காவிரி வழக்கில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வருவதைத் தவிர வேறு வழியில்லை. கர்நாடகாவில் கலவரம் ஏற்படும் என்பதால்தான் தேர்தலுக்குப் பிறகு காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீட்டைப் பற்றி தெரியாமலே எதிர்க்கட்சிகள் போராடுகின்றன. முதலில் நீட் என்ன என்பது பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அதன்பிறகு போராடுங்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்டாமல் இருந்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் சரிந்து இருக்கும். 

எந்த எம்.எல்.ஏக்களும் இன்னோர் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இன்னோர் முதல்வர் அவர்கள் கண்ணுக்கு தெரிந்தால்தான் இந்த அரசு கவிழும். எந்த எதிர்க்கட்சிக்கும் இன்னோர் முதல்வரைக் கொண்டுவரத் திறன் இல்லை. எடப்பாடி அரசில், செயல்பாடு என்ற ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் பார்க்கலாம். மோடியை வீழ்த்துவதற்காக எல்லோரும் ஒன்று சேர்ந்தால் அது பலிக்காது. கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ரஜினி, கமலுக்கு நான் அரசியல் ஆலோசனைகளை வழங்குவதில்லை. அவ்வாறு அவர்களுக்கு ஆலோசகராக இருந்தால், அது எனக்குப் பெருமைதான். தமிழகத்தில் தலைமை வெற்றிடம் இருப்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வெற்றிடத்தை ரஜினியால் நிரப்ப முடியும். மோடியின் ஆட்சி, திறமை, ரஜினியின் மக்கள் செல்வாக்கு தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்பும். தமிழக மக்கள் நல்லவர்கள், அரசியல்வாதிகளால்தான் இங்கு பிரச்னை ஏற்படுகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!