வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (09/05/2018)

கடைசி தொடர்பு:21:42 (09/05/2018)

`இந்த உலோகத்தின் மதிப்பு 37,500 கோடி ரூபாய்!' - விஞ்ஞானி போர்வையில் நடந்த சதுரங்க வேட்டை

`நாசாவிடம் இந்த உலோகப் பொருளை விற்றால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்' என சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன் உள்ளிட்ட மோசடிக் கும்பலைக் கைது செய்திருக்கிறது டெல்லி போலீஸ். 

தீருட்டு

(PC- bhishamsingh)

டெல்லியைச் சேர்ந்தவர் நரேந்திரர். இவர் ஆடை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். கடந்த மே மாதம் வீரேந்திர மோகன்பிரார், பாபா பிரார் உள்பட ஐந்து பேர் நரேந்திரரைச் சந்தித்தனர். அவரிடம், உலோகப் பொருள் ஒன்றைக் காண்பித்துள்ளனர். `இந்தப் பொருளை விற்றால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். இந்த உலோகப் பொருளுக்கு ரூ.37,500 கோடி கொடுக்கவும் தயாராக உள்ளனர்' எனக் கூறியுள்ளனர். இதை நம்பிய நரேந்திரர், 51 லட்ச ரூபாயை வீரேந்திர மோகன்பிரார், பாபா பிரார் ஆகியோரிடம் கொடுத்தார். இதன்பின்னர், ஆய்வகத்தில் இந்த உலோகப் பொருளை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி, அதற்கும் லட்சக்கணக்கில் அவரிடம் பணம் கறந்துள்ளனர். இதன்பிறகு இரண்டு மாதங்களாக அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதை அறிந்த நரேந்திரர், டெல்லி குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். 

தீருட்டு

(PC- bhishamsingh)

அந்தப் புகார் மனுவில், `வீரேந்திர மோகன்பிரார் என்பவர், தன்னை ஒரு விஞ்ஞானி என்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்றும் என்னிடம் அறிமுகமாகினார். அவருடன் வந்தவர்கள், என்னிடம் உலோகப் பொருள் ஒன்றைக் காண்பித்தனர். மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ அமைப்பில் சோதனை நடத்தி, அவர்கள் கொடுக்கும் சான்றிதழ் வாங்கிவிடலாம். உலோகத்தை நாசாவுக்கு விற்றால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்று கூறினர். இதில் வரப்போகும் லாபத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றனர். அந்த உலோகப் பொருளை ஆராய்ச்சி செய்யும்போது அதிலிருந்து அணுக் கதிர்வீச்சு வரவாய்ப்புள்ளது.

எனவே, அதற்குத் தனியாக உடை வாங்க வேண்டும் அதற்காக, 87.2 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அவர்களை நம்பி ரூ.51.1 லட்சம் கொடுத்துள்ளேன்'. என்னை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின்பேரில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நரேந்திரர் ஏமாற்றப்பட்டதைக் கண்டறிந்தனர். அவரை ஏமாற்றிய வீரேந்திரர் மோகன் பிரார், பாபா பிரார் மற்றும் அவர்களது கூட்டாளிகளை போலீஸார் தேடிவந்தனர். மோசடிக் கும்பலின் செல்போனை ட்ரேஸ் செய்து, அவர்கள் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்து கைது செய்தனர். இதில், வீரேந்திரர் மோகன் பிரார், பாபா பிரார் ஆகிய இருவரும் தந்தை, மகன் எனத் தெரியவந்துள்ளது.