'யாரும் அவர்களை தாக்க வேண்டாம்'- பொதுமக்களுக்குத் திருவள்ளூர் எஸ்.பி அலெர்ட்

திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் தவறான தகவல்களைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. வட மாநில மக்கள் மீது சந்தேகம் இருந்தால் புகார் அளிக்கலாம். அதை விடுத்து அவர்களை அடித்துத் துன்புறுத்தக் கூடாது எனத் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறையைப் பயன்படுத்தி காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில நாள்களாகவே சுமார் 200-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று, குழந்தைகளைக் கடத்தும் நோக்கில் சுற்றிவருவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் வடமாநிலத்தவர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்டவை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் என்பதால், வடமாநிலத்திலிருந்து அதிக அளவில் இங்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். 

அவர்களை கண்டதும் பொதுமக்கள் தாக்கும் நிலை தற்போது நிலவிவருகிறது. கடந்த சில நாள்களில் மாவட்டங்களின் பல பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோன்ற செயல்களால் அப்பாவி மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படலாம். இந்த நிலையில் 'வடமாநில வாலிபர்கள் குழந்தைகள் கடத்த வந்ததாகச் சந்தேகம் ஏற்பாட்டால் பொதுமக்கள் யாரும் அவர்களைத் தாக்க வேண்டாம் என்றும், தவறான தகவல் பரப்புவோர் மீதும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதுகுறித்து  திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி விடுத்துள்ள வேண்டுகோளில்  ``பொதுமக்கள் தங்கள் ஊருக்குள் வரும் புதிய நபர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருப்பின், உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது  மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் அளிக்கலாம். காவல்துறை அவர்களிடம் தீர விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கும். பொதுமக்கள் தவறான தகவல்களைக்  கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலும், இதுகுறித்து காவல்துறையினர் ஆட்டோ மூலம் துண்டுப்பிரசுரங்களை கொடுத்தும், ஒலிபெருக்கி மூலமாகவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதை விடுத்து அவர்களை அடித்துத் துன்புறுத்தக் கூடாது. இதுதொடர்பாகப் புகார் தெரிவிக்கக் காவல் நிலைய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. புகார் தெரிவிக்க விரும்புவோர் 044 - 27660609 என்ற திருவள்ளூர் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!