Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`புனரமைப்புப் பணிகளால் தஞ்சை பெரிய கோயில் கோபுரத்துக்கு ஆபத்து!’ - கொதிக்கும் ஆர்வலர்கள்

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பாரம்பர்யமிக்க சோழர்கால கோயில்களின் சிலைகள், கல்வெட்டுகள் திருப்பணிகள் என்கிற பெயரில் சிதைக்கப்படுவதாகச் சில வருடங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்போது தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகத்துக்காக புனரமைப்பு என்கிற பெயரில் நடைபெறும் திருப்பணியில் முக்கியமான ராஜராஜன் சோழன் கால கல்வெட்டுகள் சிதைக்கப்படுவதாகவும், ரசாயன கலவை கொண்டு கோபுரம் சுத்தம் செய்யபடுவதன் மூலம் கோபுரத்துக்கு பெரிய அளவில் ஆபத்து என்றும் வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தஞ்சை பெரிய கோயில்

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டபட்டு 1,000 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சி அளிப்பதோடு உலக பிரசித்திபெற்றும் விளங்கி வருகிறது தஞ்சாவூர் பெரிய கோயில். சோழர்களின் கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் வெளிநாட்டினரே வியந்து பார்க்கும் தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள பெரிய கோயில் தமிழர்களின் பண்பாட்டு சின்னமாகவும் விளங்கி வருகிறது. யுனஸ்கோவின் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வரும் இக்கோயில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 20 வருடங்களுக்கும் மேலிருக்கும். அதனால் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஆன்மிக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையொட்டி பெரிய கோயிலில் வெகு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காகக் கோயிலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பிலிருந்தே பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட பணியாகக் கோயிலின் திருச்சுற்று மண்படத்தில் உள்ள ஓவியங்கள் மற்றும் சிவலிங்கத்தைப் பாதுகாக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன. 

அதன் பிறகு, ஒவ்வொரு சந்நியையும் பக்தர்கள் அறியும் வண்ணம், பெயருடன் கூடிய போர்டுகள் அமைக்கப்பட்டன. கோயிலில் பூங்காவில் புல்தரைகள் அமைக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் தரைதளத்தில் செங்கற்கள் சிதிலமடைந்து காணப்பட்டன. இப்போது   அதைச் சீரமைக்கும் வகையில் பழைய செங்கற்களை எடுத்துவிட்டு, புதிய செங்கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலைப் புனரமைப்பது மகிழ்ச்சி தரக்கூடியதுதான் என்றாலும், திருப்பணியின்போது பல கல்வெட்டுகள் சிதிலமடைந்துவிட்டது. மேலும், பல இடங்கள் சேதமடைந்துள்ளது எனக் குற்றம் சாட்டுகிறார்கள் ஆர்வலர்கள்.

இதுகுறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளரான குடவாயில் பாலசுப்ரமணியத்திடம் பேசினோம். ``பெரிய கோயிலின் உள் வளாகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள திருச்சுற்று மாளிகைப் பகுதியில் புதுப்பிக்கிறேன் எனப் புதிய தூண்களைப் பொருத்தினர். இதில் அங்கு இருந்த நான்கு கல்வெட்டுகள் தூள் தூளாக உடைந்துவிட்டன. இவை ராஜராஜ சோழனின் கல்வெட்டு பொக்கிஷம். விமான கோபுரத்தின் உள் பகுதியில் சுவர்களைச் சுரண்டி எடுத்தனர். இதற்காக சாரம் கட்டி வேலை பார்த்தனர். இதனால் கோபுர உள்பகுதி சுவர் முழுவதும் சேதமடைந்து இப்போது மழை பெய்தால் உள்ளே நீர் கசிகிறது. மேலும் கோபுரத்தின் மீது ரசாயன கலவையை நீரில் கலந்து பீய்ச்சி அடித்து கழுவுவதன் மூலம் கோபுரம் பாதிக்கப்படுகிறது.

இந்த ரசாயனக் கலவை பூசுவதன் மூலம் பார்ப்பதற்கு பளீர் என இருக்கும். ஆனால், போகப் போகக் கோபுரத்துக்கு கடுமையான பாதிப்புகள் உண்டாகும். இந்தப் பணிகளைத் தொழில்நுட்பம் வாய்ந்த வல்லுநர்களிடம் ஒப்படைத்து அவர்களின் மேற்பார்வையில் பணிகளைச் செய்து நம் பாரம்பர்யத்தைக் காக்க வேண்டும். ஆனால், பெரிய அனுபவமில்லாதவர்களிடம் கொடுத்து பணிகளைச் செய்கின்றனர். இதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது’’ என்று வேதனை தெரிவித்தார்.

ராஜராஜ சோழனின் கடந்த சதயவிழாவை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உதவியுடன் தமிழக அரசு நடத்தியது. இது, அப்போது தமிழ் உணர்வாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பும் தெரிவித்தனர். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி சோழ தேசத்தை நாசமாக்கும் முயற்சியில் இருக்கிறது மத்திய அரசு. இப்போது மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சோழர்களின் அடையாளமான பெரிய கோயிலையும், திருப்பணிகள் என்கிற பெயரில் ரசாயன கலவை பூசுவதன் மூலம் நம் பெருமையை அழிக்கப் பார்க்கிறது. ரசாயனக் கலவை பூசுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

தொல்லியல் துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தோம். ``கும்பாபிஷேகம் விரைவில்  நடக்க உள்ளது. அதற்காக மத்திய தொல்லியல் துறை பல்வேறு வசதிகளை பெரிய கோயிலில் செய்து வருகிறது. பக்தர்கள் வசதிக்காக ஆர்.ஓ, குடிநீர் சிஸ்டம், இருக்கைகள் போன்றவற்றை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தரைதளம் சீர் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே ரசாயனக் கலவை கொண்டுதான் கோபுரம் சுத்தம் செய்யப்பட்டது. இன்னும் சில தினங்களில் கேரளாந்தகன், ராஜராஜன் கோபுரம், 214 அடி உயரம் கொண்ட விமான கோபுரம் என அனைத்து கோபுரங்களையும் வேதியியல் முறையில் ரசாயன கலவை கொண்டு கோபுரத்தில் படிந்துள்ள கறைகளை அகற்றி சுத்தம் செய்யப்படும்’’ எனக் கூலாகக் கூறி வருகின்றனர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement