வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (10/05/2018)

கடைசி தொடர்பு:01:00 (10/05/2018)

பி.ஜே.பி - காங்கிரஸ் கூட்டு சேர்ந்து தமிழகத்துக்கு எதிராக சதி செய்கின்றன! ஜி.கே.வாசன் விமர்சனம்

`மத்திய பி.ஜே.பி. அரசு கர்நாடகாவில் நடக்கும் தேர்தலைதான் முக்கியமாக பார்க்கிறது.தமிழக விவசாயிகளின் உயிர் பிரச்சனையான காவிரி பிரச்சனையை பார்ப்பது இல்லை. எலியும் பூனையுமாக இருக்கும் பி.ஜே.பியும்,காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் மட்டும் கூட்டாக இணைந்து கொண்டு காவிரியில் தமிழகத்திற்கு எதிராக சதி செய்கின்றன’ என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

`மத்திய பி.ஜே.பி. அரசு கர்நாடகாவில் நடக்கும் தேர்தலைதான் முக்கியமாக பார்க்கிறது.தமிழக விவசாயிகளின் உயிர் பிரச்சனையான காவிரி பிரச்சனையை பார்ப்பது இல்லை. எலியும் பூனையுமாக இருக்கும் பி.ஜே.பியும்,காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் மட்டும் கூட்டாக இணைந்து கொண்டு காவிரியில் தமிழகத்திற்கு எதிராக சதி செய்கின்றன’ என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஜி.கே.வாசன்

தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், ``காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இரு தேசிய கட்சிகளும் தங்களது சுயரூபத்தை காட்டியுள்ளன. தமிழக மக்கள், அவர்களுக்குத் தக்க பதிலளிப்பார்கள். மத்திய அரசை நம்பி காவிரி மேலாண்மை வாரியம் அமையும், தண்ணீர் வரும் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். வரைவுத் திட்டத்தை முழுமையாகத் தயாரிப்பதற்கு மத்திய அரசு 10 நாட்கள் கால அவகாசம் கேட்டது ஏற்புடையதல்ல. அதற்கு மே 14-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்ததும் வருத்தம் அளிக்கிறது. ​ மத்திய பா.ஜ.க அரசு கர்நாடகத் தேர்தலை முக்கியமாக கருதுகிறது. ஆனால், தமிழக விவசாயிகளின் உயிர் பிரச்னையான காவிரி பிரச்சனையை முக்கியமாகக் கருதவில்லை. கர்நாடக முதல்வரும் தண்ணீர் தர முடியாது எனக் கூறி வருவது தொடர் கதையாகிவிட்டது. இது,​ வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. இரு தேசிய கட்சிகளும் தமிழக நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவில்லை. நான்கு டிஎம்சி தண்ணீர் என்பது தமிழகத்துக்கு அவசியமானது; அவசரமானது. கர்நாடக அரசுத் தண்ணீர் தர மறுப்பதும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுப்பதும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. சட்டத்தை மதிக்காத அரசாக கர்நாடக அரசு உள்ளது. உச்ச நீதிமன்றம்தான் உரிய நீரை தமிழகத்துக்குச் சட்டப்படி பெற்றுத்தர வேண்டும். ​இப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் மீத்தேன், ஷேல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களைத்  திணிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. இதை எதிர்த்து விவசாயிகளுடன் சேர்ந்து த.மா.கா போராட்டம் நடத்தும். 

திருமானூர் கொள்ளிடக் கரையில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என்று நீதிமன்றம் ​உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், அங்கு மணல் குவாரியை அமைப்பதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. 25 ஆண்டுகளாக பல இடங்களில் மணல் குவாரி அமைக்கப்பட்டு, மணல் சுரண்டப்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் மணலை அள்ளினால் பாலைவனமாகிவிடும். எனவே நீதிமன்றத்தின் உத்தரவு தொடர வேண்டும். 

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும், 7,000 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை விலக்கிக் கொள்ள வேண்டும். விருதுநகர் பேராசிரியர் விவகாரத்தில் விசாரணையை ஒரு காலக்கெடுவுக்குள் முடித்து, உண்மையை வெளிப்படுத்த வேண்டும் .அதில், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். காவிரி பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளால் ஒன்று சேரவில்லை, சேரவும் முடியவில்லை. ஆனால், கர்நாடகத்தில் காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. குறிப்பாக, பிற மாநிலங்களில் எலியும், பூனையுமாக உள்ள பி.ஜே.பி, காங்கிரஸ் கட்சிகள் கர்நாடகத்தில் காவிரி பிரச்னையில் ஒன்றாகச் சேர்ந்து தமிழகத்துக்கு எதிராகக் கூட்டு சதி செய்கின்றன. தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டபோது, பிரதமரை சந்திக்க வேண்டும் என பேசினர். ஆனால், இதுவரை அதற்கான பதில் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் நிலையை இது பிரதிபலிக்கிறது​. காவிரி பிரச்சனைக்காக அழைத்தால் த.மா.கா. இணைந்து போராடும். 

நீட்தேர்வில் ஆரம்பம் முதலே குழப்பம்தான் உள்ளது. மத்திய அரசின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ-யின் திறமையின்மையை இது காட்டுகிறது. நீட்தேர்வை நடத்தலாமா என்று மறுரிசீலணை செய்யக்கூடிய நிலையில் உள்ளது. கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று மூன்றாவது முறையாக மாநிலம் முழுவதும் ஜுன் 2ம்தேதி சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளேன். கூட்டணி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது, காவிரி பிரச்னையில் கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக நமது உரிமையை இழந்து வருகிறோம். நிர்வாக திறமையின்மையால், அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக நடைபெற வேண்டும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க