Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை - சேலம் பசுமைவழிச் சாலைக்காக 100 ஹெக்டேர் வனத்தை அழிக்கும் அவலம்!

கோவையிலிருந்து சிறுவாணி செல்லும் சாலையைப் பார்க்கவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். இரு புறங்களும் மரங்களால் சூழப்பட்ட சாலை அது. பேரூரைத் தாண்டினால் சிறுவாணி மலைக்காற்று உடலைத் தீண்டத் தொடங்கிவிடும். குளுமையான காற்றால் நம்மை அறியாமலேயே உள்ளமும் உடலும் குளிர்ந்துவிடும். குளுகுளுவென காலநிலை நிலவும் சாலை அது. தமிழகத்தின் ஓர் எல்லைப்பகுதி சிறுவாணி. கோவை குற்றாலம் வரைதான் மக்கள் செல்ல முடியும். அதற்குப் பிறகு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி தொடங்கிவிடும். 

சாலை

மக்கள் நடமாட தடைசெய்யப்பட்ட பகுதி. போக்குவரத்து நெருக்கடி இல்லாத சாலையான இங்கு, பிற்காலத்திலும் பெரியளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட சாலையிலேயே விரிவாக்கம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி அப்புறப்படுத்த முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், சுற்றுப்புற ஆர்வலர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். ஏற்கெனவே கோவை - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு சாலை சுடுகாடாகக் காட்சியளிக்கிறது. மர அழிப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால், கோவை மாநகரின் தட்பவெப்ப நிலையிலும் தற்போது மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. சமீபகாலத்தில் சென்னையைவிட கோவையில் கோடை வெயில் அதிகரித்துவருவது கண்கூடு. 

சிறுவாணி அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த வெடிகுண்டு வந்து விழுந்துள்ளது. சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமைவழிச் சாலை அமைப்பதற்காக 100 ஹெக்டேர் அளவிலான காட்டை அழிக்கப்போகிறார்கள். இந்தியாவில் முதல் பசுமைவழிச் சாலை மும்பை - புனே நகருக்கிடையே அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, சேலம்-சென்னை இடையே பசுமை வழிச் சாலை அமைக்கப்படும் என்று தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். ஆய்வுப்பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. 

சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கெனவே மூன்று பாதைகள் உள்ளன. விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர் முதல் வழி. அடுத்தது  பூந்தமல்லி, வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஊத்தங்கரை, அரூர் வழியாகவும் செல்லலாம். வேலூரிலிருந்து பிரிந்து வாணியம்பாடி, பர்கூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாகவும் சேலத்தை அடைய முடியும். 

புதிதாக அமையும் பாதை சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் தொடங்கி மஞ்சவாடி கணவாய், அரூர், தீர்த்தமலை, தண்ட்ராம்பட்டு, திருவண்ணாமலை, வந்தவாசி, உத்திரமேரூர் வழியாக செங்கல்பட்டில் வந்து இணையும். தற்போது சென்னை-சேலத்துக்கு இடையே 340 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. பயண நேரம் 6 மணி நேரம். பசுமைவழிச் சாலை அமைந்தால் வெறும் 57 கிலோமீட்டர் தொலைவுதான் குறையும். இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விலை மதிப்பில்லா மரங்களை அழித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சாலை அமைப்பதற்காக 2,343 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதில் 100 ஹெக்டர் நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருகிறது

சாலை

பசுமைவழிச் சாலை அமைக்கும் பணியால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு வனக்கோட்டத்தில் சிறுவஞ்சூர், ஆரணியில் நம்பேடு, சாத்தனூரில் பிஞ்சுர், திருவண்ணாமலையில் சொரக்களத்தூர்,  போளூரில் அல்லமங்கலம், செங்கத்தில் முன்னாமங்கலம், ஆனந்தவாடி, ராவந்தவாடி, தீர்த்தமலையில் பூவாம்பேட்டை, பூவாம்பேட்டை பிரிவு,  அரூரில் பள்ளிப்பேட்டை, சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் வனக்கோட்டத்தில் உள்ள மஞ்சவாடி, சருகுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள மரங்கள் அழிக்கப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மொத்தம் உள்ள 274.3 கிலோமீட்டர் தொலைவில் 23 கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இந்தச் சாலை அமைக்கப்பட உள்ளது. 

சாலை அமைப்பதற்காக வனத்துறை நிலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பிரச்னைகள் எழாமல் பார்த்துக்கொள்ளவும் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான வனவிலங்குகள், அரிய வகை பறவைகளின் புகலிடமான வனத்தை அழித்து சாலை அமைக்கவும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இளந்தளிர் அமைப்பின் தலைவர் ஜே.டி.பிரகாஷ் ``10 ஹெக்டேர் வனப்பகுதி அழிக்கப்பட்டாலும் சுற்றுச்சூழலுக்கு ஈடுஇணையில்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். இங்கோ 100 ஹெக்டர் வனப்பகுதியில் மரங்களை அழித்துவிட்டு சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். வனவிலங்குகள் மற்றும் பறவைகள், தன் வாழ்விடங்களை இழந்து அழிந்துபோகக்கூடும்'' என்று பதறுகிறார்.

உலகிலே காட்டை அழித்து பசுமைவழிச் சாலை அமைக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement