வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (09/05/2018)

கடைசி தொடர்பு:23:30 (09/05/2018)

சசிகுமார் கொலை வழக்கு: என்.ஐ.ஏ ரெய்டு... அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்!

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சம்பந்தமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சம்பந்தமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ரெய்டு

கோவை, இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார், கடந்த 2016 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு, ஜனவரி மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக என் ஐ ஏ அதிகாரிகள் பல்வேறு விசாரணைகள் மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன், கைது செய்யப்பட்ட  முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர்.இதில் அபுதாகிர்,சுபேர் ஆகியோரின் இல்லங்களில் இருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. 

இந்தநிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில், ஹைதர் அலி, ஹநீஸ், முகமது அலி, சதாம்,   ஃபெபின் ரஹ்மான் ஆகியோரின் வீடுகளில் என்.ஐ.ஏ அமைப்பினர் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் செல்போன்கள், மெம்மரி கார்டுகள் போன்ற ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதில், ஹநீஸின் வொர்க்ஷாப்பிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இதில் ஃபெபின் ரஹ்மான் கடந்த சில நாள்களுக்கு முன்பு, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீது புகார் அளித்திருந்தார்.

புகார்

என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனையை அடுத்து,அவர்கள் 5 பேரும், கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் மீண்டும் புகார் மனு ஒன்று அளித்து உள்ளனர். அதில் அவர்கள், “என்.ஐ.ஏ அதிகாரிகள் வேண்டும் என்றே எங்களை குறிவைத்து மிரட்டுகிறார்கள்.  அவர்கள் கூறுவது போல் நடந்து கொள்ளவில்லை என்றால், கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, அதிகாலை அனைவரும் உறங்கிக் கொண்டு இருக்கும்போது,  20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், வீட்டில் சோதனை என்ற பெயரில் பொருள்களை எல்லாம் எடுத்து வீசி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். அவர்கள் கூறுவதை கேட்கவில்லை என்றால், ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்திவிடுவோம் என மிரட்டுகின்றனர். எனவே எங்களையும், எங்களது பெற்றோர்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை” என்று கூறியுள்ளனர்.  இவர்கள் 5 பேரும் எஸ்.டி.பி.ஐ அமைப்பின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.