திருச்சியில் வெளுத்து வாங்கிய மழை -வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது!

கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்னிநட்சத்திரம் தொடங்கியது. அதனையடுத்து தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக திருச்சியில் 106டிகிரி வரை வெயில் அனலாய் கொளுத்தியது. இதனால் வெளியில் நடமாட முடியாதபடி மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மக்கள் படாதபாடுபட்டனர்.
மழை

இந்நிலையில்   சென்னை வானிலை மையம் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது. 

அதன்படி நேற்று இரவு திருச்சி பகுதிகளில் வீசிய வெப்பச்சலன காற்றுக் காரணமாக திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி, பெல், மணப்பாறை, துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், திருச்சி மாநகரில் கண்டோன்மென்ட், விமான நிலையம், ஸ்ரீரங்கம், பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் இன்று மதியம் 4 மணியில் இருந்து திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென மேகமூட்டமாகக் காணப்பட்டது.  அடுத்த சில நிமிடங்களில் இருள் சூழ்ந்த நிலையில் மழை கொட்டத் துவங்கியது சுமார்  1.30 மணி நேரம் வானம் கொட்டித் தீர்த்தது. வறட்சி நிலவிய பகுதிகளில் மழையைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையில் திருச்சி மாநகரம் மட்டுமல்லாமல்,  லால்குடி, சமயபுரம், டால்மியாபுரம், லால்குடி, மணச்சநல்லூர், ரஞ்சிதபுரம்  உள்ளிட்ட பகுதிகளில் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இன்று திருச்சியில் சுமார் 7.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!