நேற்று சூப்பர் ஸ்டார்... இன்று தலைவர்... நாளை..? - 'காலா' விழாவில் தனுஷ் அதிரடிப் பேச்சு!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது

ரஞ்சித் - ரஜினி கூட்டணியில், இரண்டாம் முறையாகக் களம் இறங்கியுள்ள 'காலா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்தது.

ரஜினியின் அரசியல் பிவேசத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் படம் என்பதாலும், ஒடுக்கப்பட்டோருக்கு குரல் கொடுத்துவரும் ரஞ்சித், மீண்டும் ரஜினியை வைத்து  இயக்கும் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்துவருகிறது.

இந்நிலையில் இன்று, பல எதிர்ப்பு மற்றும் அதிருப்திக்கு மத்தியில் நடந்த இந்தப் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில், ரஜினி அரசியல் குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு முன்னர் பேசிய தனுஷ், அதற்கான டீசர் காட்டும் வகையில் பேசினார். 


 காலா


தனுஷ், "தலைவருக்கு (ரஜினி)  புகழ்ந்தால் பிடிக்காது. அதனால, அவரிடம் கத்துக்கிட்ட சில விஷயங்களைப் பகிர்கிறேன்" என்று ஆரம்பித்தார். "படத்தின் கடைசி நாள் 11.30 மணிக்கு முடியவேண்டிய ஷூட்டிங், 2.30 மணி வரை நீண்டது. அப்போதும், முதல் படத்தில் வேலை செய்வதுபோலவே அவர் காட்டிய தொழில் பக்தியை, அப்போது கற்றுக்கொண்டேன். இந்தக்  கதையை ரஞ்சித் அவரிடம் சொல்லும்போது, தயாரிப்பாளரிடமும் கதையைக் கூறுங்கள் என்று சொல்லும்போது, தயாரிப்பாளரை மதிக்கும் பண்பைக் கற்றுக்கொண்டேன். 

வாழ்க்கையில் பிரபலமாவதற்கு இரண்டு வழி இருக்கு. ஒண்ணு கஷ்டப்பட்டு முன்னேறி பெரிய இடத்தை அடைவது. அடுத்தது, அந்த இடத்தில் இருக்கும் ஒருவரைத்  தாக்கிப் பேசி பிரபலம் அடைவது. (தனுஷ் இதைக் கூறும்போதே அரங்கம் அதிர்ந்தது). இப்படி 40 வருடங்களாக இவரால் (ரஜினி) வாழ்ந்தவர்களும், பிழைத்தவர்களும். இவரைப் பற்றி தவறாகப் பேசியும் வருவதற்கு, 'பழுத்த மரம்தான் கல்லடி படும்'என்று பொறுமையாய்  இருந்துவருகிறார். இதில் அவரது பொறுமையைக் கற்றுக்கொண்டேன்.

சமீபகாலமாக,  பலரும்  மனது வருத்தப்படும்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களையும் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்கவேண்டுமா என்றேன். அதற்கு  அவர், " எல்லாரும் நண்பர்கள்தான்; எல்லாரையும் கூப்பிடுங்கள்" எனச் சிரித்துக்கொண்டே கூறினார். இன்னா செய்தாருக்கும் நன்மை செய்துவிடல் என்ற திருக்குறளுக்கு ஏற்ப வாழ்பவரிடமிருந்து பெருந்தன்மையும், மன்னிக்கிற குணத்தையும் கத்துக்கிட்டேன். 

காலா

முதலில் வில்லன், குணசித்திர நடிகர், பிறகு ஹீரோ, ஸ்டார், ஸ்டைல் மன்னன், சூப்பர் ஸ்டார், இன்று தலைவர் (அடங்க மறுக்கிற அரங்கத்தின் குரலோசை முடிவதற்குள்) நாளை... உங்களைப்போல நானும் காத்திருக்கிறேன் என்று கூறினார். 

இறுதியாக, 'காலா' படத்தை தனுஷாக தயாரிக்கவில்லை 'பாட்ஷா' படத்தை முன் சீட்டில் உட்கார்ந்து பார்த்த ரசிகன் வெங்கடேஷ் பிரபுவாகத்தான் தயாரித்திருக்கிறேன்" என்றார்.

 

 

 

   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!