எஸ்.வி சேகர் மீதான அவதூறு வழக்கு - 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

 எஸ்.வி சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் மீது முகநூலில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகர் மீது கரூரில் தொடரப்பட்ட வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

பெண் பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேஸ்புக்கில் ஒருவர் போட்ட பதிவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க வைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்ய, அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரைக் கண்டித்து பத்திரிகையாளர்களும், பெண் அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இதனால், அவர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். திருநெல்வேலி நீதிமன்றத்திலும் அவர்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே பிரிவு)யின் தமிழக மாநில அமைப்பாளர் பாண்டியன் என்பவர், வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மூலமாக கரூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மீது 7 பிரிவுகளில் வழக்குத் தொடுத்தார்.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா வருகின்ற 15-ம் தேதி சாட்சிகள் விசாரணைக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!