மாடுகளுக்காகப் பரிதாபப்பட்ட பெண்ணுக்கு நடந்த துயரம் - பெரம்பலூரில் மின்னல் தாக்கி 2 பேர் பலி!

பெரம்பலூர் மாவட்டத்தில், கடும் மழையின்போது ஏற்பட்ட மின்னல் தாக்கி பள்ளி மாணவன் உள்பட  2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழை மின்னல்

தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்துவருகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி. இவர், தனது மாடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். பின்னர், மாலையில் மேய்ச்சலுக்கு விட்ட மாடுகளை வீட்டுக்கு ஓட்டிவந்தார்.

அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாடுகள் மழையில் நனைவதைப்  பார்த்ததும், அவற்றைக்  கட்டிவிட்டு மரத்தடியில் நின்றிருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியதில், செந்தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சேகர், மங்களமேடு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, செந்தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம், அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், மேலும் ஒரு சிறுவன் பெரம்பலூரில் பலியானார்.  

பெரம்பலூர் அருகே கொளத்தூர் கிராமத்தைச்  சேர்ந்த சிறுவன் அரவிந்த், கொளத்தூர் அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறான். நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் இடியுடன்கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், கொளத்தூர் ஏரிக்கரை அரச மரத்தடியில் மழைக்காக ஒதுங்கியிருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியதில், அரவிந்த் படுகாயமடைந்தான். இதைப்  பார்த்த அருகில் இருந்தவர்கள், அரவிந்தை மீட்டு சிகிச்சைக்காக கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக்  கொண்டுசென்றனர். அங்கு  பரிசோதித்த மருத்துவர்கள்,  அரவிந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக்  கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!