வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (10/05/2018)

கடைசி தொடர்பு:10:33 (10/05/2018)

மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை..! இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அரியலூர் மக்கள்!

கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்ட மணல் குவாரிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததையொட்டி, கிராம மக்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினார்கள்.

                              

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியப் பகுதியில் திருமானூர், குலமாணிக்கம், திருமழப்பாடி, ஏலாக்குறிச்சி, தூத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒட்டியவாறு கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்தக் கொள்ளிடம் ஆற்றில் ஓடும் தண்ணீரால் இந்தக் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்துக்குப் பெரிதும் உதவி வருகிறது. இதனால், இப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் போர்வெல்கள் அமைத்து விவசாயம் செய்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டுவந்த மணல் குவாரியால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறது. மேலும், கொள்ளிடம் ஆற்றில் 10-க்கும் மேற்பட்ட போர்வெல்கள் அமைக்கப்பட்டு பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கூட்டுக்குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் குடிநீர் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு குறைந்துவிட்டது.
                                        

இந்நிலையில், தற்போது திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள்,  கடந்த ஒரு மாதமாக ஆர்ப்பாட்டம், பேரணி, கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் அரசு, மணல் குவாரியை இரண்டு நாள்களுக்கு முன் திறந்தது. இந்நிலையில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

                                

வழக்கின் விசாரணையில், கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக் குழுவினர் மற்றும் கிராம மக்கள், வெடி வெடித்து இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த உத்தரவு நீடிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.