வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (10/05/2018)

கடைசி தொடர்பு:08:53 (10/05/2018)

“கணவருடன் சேர்த்துவைக்க ரூ 4 ஆயிரம் லஞ்சம்” கிருஷ்ணகிரியில் பெண் அதிகாரி கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேவீரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர், தனலட்சுமி. வயது 38. அதே ஊரைச் சேர்ந்த சந்திரனைக் காதலித்துள்ளார். ஆனால் சந்திரன், தனலட்சுமியைக் காதலித்து நெருக்கமாகப் பழகிவிட்டு, ஒரு கட்டத்தில் தனலட்சமியைத் திருமணம் செய்யாமல் விட்டுவிலக நினைத்தார். ஆனால், தனலட்சுமி விடாமல் ஊர் பெரியர்களைக் கூட்டி பஞ்சாயத்து செய்து திருமணம் செய்துகொண்டார். 

லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி

ஆனால், சந்திரனுடன் நடைபெற்ற திருமணம், தனலட்சுமிக்கு இனிமையான குடும்ப வாழ்க்கையாக அமையவில்லை. திருமணம் ஆனதும் தனலட்சமியை வெறுத்து ஒதுக்கினார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்துதான் வாழ்ந்துவந்தனர். இது தொடர்பாக பர்கூர் பெண்கள் காவல் நிலையத்தில் தனலட்சுமி புகார் கொடுத்தபோது, கணவன்- மனைவி இருவருக்கும் ஆலோசனை வழங்க சமூக நலத்துறைக்குப் பரிந்துரைசெய்து அனுப்பிவைத்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும், சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் குடும்பநலம் வன்முறை தடுப்புச் சட்டம் அலுவலகத்தில் தனலட்சுமிக்கும், சந்திரனுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தனலட்சுமி கணவருடன் சேர்ந்து வாழ்வதாகத் தெரிவித்தார். ஆனால் சந்திரன், தனலட்சுமியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டார். 

இந்தப் பிரச்னையை இருவரும் நீதிமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளும்படி பரிந்துரை அறிக்கையைத் தயார்செய்த குடும்ப நல வன்முறை தடுப்பு பாதுகாப்பு அலுவலர் கவிதா, தனலட்சுமியின் விருப்பத்தை அறிந்து ரூ.4 ஆயிரம் கொடுத்தால், கணவருடன் சேர்த்துவைப்பதாக , லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தனலட்சுமி, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனி டீம் அமைத்து, ரசாயன பவுடர் தடவிய .4 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தனலட்சுமி மூலம் கிருஷ்ணகிரி குடும்பநல பாதுகாப்பு அலுவலர் கவிதாவிடம் கொடுத்தபோது, இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் வந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கவிதாவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.