வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (10/05/2018)

கடைசி தொடர்பு:08:16 (10/05/2018)

பூமி, அண்டசராசரம்..! வானகத்தில் உடல் ஆரோக்கியம் சொல்லும் இரண்டு இளவட்டக் கற்கள்!

 பூமி கல், அண்டசராசர கல்


இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உறங்கும் வானகத்தில், இரண்டு இளவட்டக்  கற்களைப் போட்டு, அங்கே வருபவர்களின் ஆரோக்கியத்தை வித்தியாசமாக உறுதிசெய்கிறார்கள் .

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, நம்மாழ்வார் உலகிற்கே முன்மாதிரி இயற்கைப் பண்ணையாக உருவாக்க நினைத்த வானகம். அறுபதுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களைச் சுற்றி, வட்டமாக மலை எழுந்துநிற்க, அங்கே இயற்கை வேளாண், வாழ்வியல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. நம்மாழ்வாருக்குச்  சொந்த மாவட்டம் தஞ்சாவூர் என்றாலும், கரூர் மாவட்டத்தில் அவர் பண்ணை அமைக்க நினைத்தற்குக்  காரணம், தமிழகத்தின் மையத்தில் கரூர் இருப்பதுதான். அதோடு, பொட்டல்காடாக இருக்கும் நிலத்தில் இயற்கைப்  பசுமையை உருவாக்க அவர் நினைத்ததும் தான். அதற்குள் அவர் மறைந்துவிட்டார். ஆனால், அவரது சிஷ்யர்கள் வானகத்தைப்  பராமரித்துவருகிறார்கள். அப்படிப்பட்ட வானகத்தில், சிறிதும் பெரிதுமாக இரண்டு இளவட்டக்  கற்கள் போடப்பட்டிருக்கின்றன. சின்னக் கல்லில் 'பூமி' என்று எழுதப்பட்டுள்ளது. பெரிய கல்லில் 'அண்டசராசரம்' என்று செதுக்கப்பட்டுள்ளது. வானகத்திற்குப்  பயிற்சி எடுக்க, சுற்றிப்  பார்க்க வரும் இயற்கை ஆர்வலர்களிடம் இந்தக்  கற்களைத் தூக்கச்  சொல்கிறார்கள். அதை வைத்து வந்திருப்பவர்களின் ஆரோக்கியத்தைத்  தெரிவிக்கிறார்கள் .

அதாவது, சிறிய கல்லைத் தூக்கினால், பூமியைத்  தூக்கியதுபோல அர்த்தம். பெரிய கல்லைத் தூக்கினால், இந்தப்  பேரண்டத்தையே தூக்கியதுபோல என்கிறார்கள். அதாவது, சிறிய கல்லைத் தூக்க முடிந்தால், அந்த உடல்நலத்தை வைத்து,  இந்தப் பூமியையே வெல்லும் அளவிற்கு வாழ்க்கையில் உயரலாம் என்றும், பேரண்டக் கல்லைத் தூக்கினால், மற்றவர்களால் முடியாத செயலையும் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். இரண்டையும் தூக்க முடியாதவர்களின் உடல்நிலை, அவர்களைச் சுமப்பதையே பாரமாக நினைக்கும் என்று அர்த்தம் கற்பிக்கிறார்கள் . அங்கே வருபவர்களை இந்த இளவட்டக் கற்களைத் தூக்கவைத்துத் தெம்பேற்றுவது வித்தியாசமாகவும், வரவேற்பையும் பெற்றுள்ளது .