வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (10/05/2018)

கடைசி தொடர்பு:07:05 (10/05/2018)

புதிய தொழில் நுட்பத்தில் எள் -இருமடங்கு லாபம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்!

இந்த புதிய முறைப்படி எள் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 மூட்டை வரை கிடைக்கும். இந்த முறை மூலம் எங்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கிறது என்கிறார்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தில் விஆர்ஐ 3 என்ற வெள்ளை எள் ரகம் பயிரிட்டுள்ளனர். பொதுவாக எள் சாகுபடி செய்ய நிலத்தை நன்கு உழுது புழுதியாக்கப்பட்ட பின்னர் பாத்தி கட்டி எள் விதைக்கப்படும். அதன் பின்பு குறிப்பிட்ட இடைவெளியில் செடிகளை விட்டு, விட்டு இதரச் செடிகளை அகற்றிவிடுவது வழக்கம். ஆனால் குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகள் தற்பொழுது புதிய தொழில் நுட்பத்தில் எள் நடவு செய்துள்ளனர். இதன் மூலம் ஏக்கருக்கு 8 முதல் 10 மூட்டை வரை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

எள்

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி  உழவர் மன்றத் தலைவர் ராமலிங்கம், "நாங்கள் புதிய முறையில் எள் சாகுபடி செய்ய முடிவு செய்து கடந்த 2015 -ம் ஆண்டு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எள் சாகுபடி செய்தோம். அதன் பின்பு கடந்த 2016 -ம் ஆண்டு அதில் சில மாற்றங்கள் செய்து பயிரிட்டோம். இந்த ஆண்டு அதிலும் சில மாற்றங்கள் செய்து பயிர் செய்துள்ளோம். பயிர் தற்பொழுது நன்கு விளைந்துள்ளது. சாதாரண முறையில் நிலத்தை உழுது எள் பயிர் செய்தால் ஏக்கருக்கு 4 மூட்டைதான் கிடைக்கும். ஆனால் நாங்கள் புதிய முறையில் 2 அடிக்கு 2 அடி பார் பிடித்து அரை அடி இடைவெளியில் எள்ளை கையால் நடவு செய்துள்ளோம். தண்ணீர் கட்டிய 3 -ம் நாள் களைக்கொல்லி மருந்து தெளித்து களையைக் கட்டுப்படுத்துவோம். அதன் பின்னர் 15 நாள்களுக்குப் பிறகு குத்துக்கு ஒரு செடியை மட்டும் விட்டு விட்டு மற்ற செடிகளை களைந்துவிடுவோம். இந்த முறையில் செடிகள் நன்கு செழித்து வளர்கிறது. ஒரு சதுர மீட்டருக்கு சராசரியாக 11 செடிகள் வரை வளரும். பூ பூக்கும் தருணம், காய்பிடிக்கும் தருணம் டிஏபி மருந்து தெளிப்போம். இந்த புதிய முறைப்படி எள் சாகுபடி செய்தால் ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 8 முதல் 10 மூட்டை வரை கிடைக்கும். இந்த முறை மூலம் எங்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கிறது என்கிறார்.

இந்த புதிய தொழில் நுட்பத்தில் எள் சாகுடி செய்யப்பட்டுள்ளதை அருகில் உள்ள விவசாயிகள் மட்டுமல்லாமல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி போன்ற ஊர்களில் இருந்து விவசாயிகள் வந்து இங்கு ஆர்வமுடன் பார்த்து விவசாயிகளிடம் புதிய தொழில் நுட்பம் பற்றி கேட்டறிந்து செல்கின்றனர்.