``144 தடை உத்தரவுக்கு அவசியமே இல்லை” - வீர சக்கதேவி ஆலயக்குழு எதிர்ப்பு!

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு வீரசக்க தேவி ஆலயக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாஞ்சாலங்குறிச்சி வீர சக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு, ஆலயக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

வீரசக்க தேவி

இதுகுறித்து வீர சக்கதேவி ஆலயக் குழுவினர், தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய ஆலயக் குழுவின் தலைவர் முருகபூபதி, “தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சிதான், வரி கேட்ட வெள்ளையனை எதிர்த்துப் பேசிய வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சிசெய்த பகுதியாகும். தற்போது, அதன் நினைவாக நினைவுக்கோட்டை உள்ளது. கோட்டையின் அருகிலேயே உள்ளது வீர சக்கதேவி ஆலயம். கட்டபொம்மன், ஊமைத்துரை, பூலித்தேவன், வீரன் சுந்தரலிங்கம் ஆகிய வீரர்கள்  ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திய மாவட்டம் தூத்துக்குடி. வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம்தான் வீர சக்கதேவி. ஊர்மக்கள் இணைந்து நடத்திவரும், இந்த ஆலயத்தின் 62-வது திருவிழா, வரும் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டை, கயத்தார், வைப்பாறு, சிந்தலக்கரை மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களிலிருந்து ஜக்கம்மாள் தேவிக்கு,  ஜோதி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, அவரது வம்சாவளிகள், ஊர் மக்கள் பல பகுதிகளிலும் வாழ்ந்துவருகிறார்கள். வருடத்தில் ஒருமுறை மட்டுமே வரும் இந்த ஆலய திருவிழாவுக்கு மட்டுமே சொந்த ஊருக்கு வருகிறார்கள்.

ஆங்கிலேயர் ஆதிக்கம் இருந்த காலத்திலேயே இந்தக் கோயில் திருவிழாவைச் சர்வ சுதந்திரமாகக்  கொண்டாட அப்போதை ஆங்கிலேய துரைகள், அனுமதி அளித்ததாகக் குறிப்புகள் உள்ளன. அப்படி இருக்கும்போது, இந்தத் திருவிழாவுக்கு அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது நியாயமா? இந்த உத்தரவால், குறிப்பிட்ட வாகன  நிறுத்தத்தில் இருந்து  கொளுத்தும் வெயிலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் குறைந்தபட்சம் 5 முதல்  8 கி.மீ., வரை நடையாகத்தான் கோயிலை வந்தடைய வேண்டும். இன்னும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும்.

சுதந்திரப் போராட்டத்துக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற மண் இது. கோயில் வழிபாட்டுக்கு இத்தகைய தடை உத்தரவு பிறப்பிக்கப்படவேண்டிய அவசியமே இல்லை. 126 கிராம மக்கள் இணைந்து வழிபடும் கோயிலுக்கு வரத் தடையா... இது நியாயமா? இந்த வருடத் திருவிழா நடைபெற்று முடிந்த பிறகு ஊர் மக்கள் கூடிப் பேசி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்திடுவோம். அடுத்த ஆண்டு முதல் இந்தத் தடையை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!