வெளியிடப்பட்ட நேரம்: 09:47 (10/05/2018)

கடைசி தொடர்பு:09:47 (10/05/2018)

'ஜெ. நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டியது ஈ.பி.எஸ் மட்டுமா..?'' கொந்தளிக்கும் ஓ.பி.எஸ் டீம்

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ், ஜெயலலிதா

'ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டியது எடப்பாடி பழனிசாமி' என்று அவரது பெயரை மட்டுமே போட்டு அரசு செய்திக்குறிப்பில் பதிவிட்டுள்ளதால், ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில், ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளார்கள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கேயே தங்கி தொடர்ந்து 75 நாள்கள் சிகிச்சை பெற்றுவந்த அவர், டிசம்பர் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல், மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. ``அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்'' என்று சட்டசபையில் அ.தி.மு.க அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து நினைவிடம் அமைப்பதற்கான வேலைகள் நடந்தன. நினைவு மண்டபம் அமைக்க டெண்டர் விடப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதற்காக, கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 7-ம் தேதி நடந்தது. காலை 6.30 மணிக்குத் தொடங்கிய யாகசாலை பூஜையை அடுத்து, காலை 9 மணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. 

விழா

அடிக்கல் நாட்டும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டு, அவர்கள் இருவருமே செங்கல் எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டி, நினைவு மண்டபம் அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்தனர். அப்போது நடந்த பூஜைகளில் இருவருமே கலந்துகொண்டனர். ஆனால், இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், `முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (7.5.2018) எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் 50 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள, 'புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா' நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பொ.சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ்

அதாவது, `தமிழக அரசுக் கோப்புகளின் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் அடிக்கல் நாட்டினார்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், `கலந்துகொண்டோர்' பெயர் பட்டியலில்தான் இடம்பெற்றுள்ளது. மேலும், ``ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் யாகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்; பூமி பூஜையில் கலந்துகொண்டார்கள்'' என்றுதான் தமிழகச் செய்தித் துறை வெளியிட்ட போட்டோக்களின் அடிக்குறிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், துணை முதல்வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 

இதுகுறித்து, ஓ.பன்னீர்செல்வம் ஆதவாளர்களிடம் விசாரித்தோம். ``ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டுவதற்கு அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 கோடி ரூபாயை ஒதுக்கினார். அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனவுடன் அந்த நிதியை 46.63 கோடி ரூபாயாக ஆக்கினார். அது இப்போது 50.80 கோடி ரூபாயாக ஆகிவிட்டது. இந்த நிதியையும் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்தான் அறிவித்தார். இப்போது, நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவுக்கு விடுக்கப்பட்ட அ.தி.மு.க தலைமைக் கழக அழைப்பிதழில்கூட முதலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் அறிவிப்பு வெளிவந்தது.

அறிக்கை

ஆனால், அடிக்கல் நாட்டு விழா முடிந்த பிறகு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் அடிக்கல் நாட்டியது இருவரும் என்று சொல்லாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரை இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள். இது முதல்வருக்குத் தெரிந்து நடந்ததா என்பது தெரியவில்லை. உண்மையில், ஓ.பி.எஸ்ஸுக்கும், ஈ.பி.எஸ்ஸுக்கும்தான் மாலை அணிவிக்கப்பட்டு, பின்னர் அங்கு நடந்த பூஜைக்குப் பிறகு அவர்கள் இருவருமே செங்கல் எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டினர். இது, அனைத்து செய்தி ஊடகங்களிலுமே இருவருடைய படங்களுடன் வெளியானது. இப்படியான நிலையில், தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கைதான் ஏமாற்றுவதாக இருக்கிறது. இந்தப் புறக்கணிப்பு எங்களை வேதனை அடையச் செய்துள்ளது. இதில் நடக்கும் உள் அரசியல்களை முதல்வர் உடனே விசாரிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற அவமரியாதைகள் நடக்கக்கூடாது'' என்றனர், சற்றே வருத்தத்துடன்.

முதல்வருக்குத் தெரியாமல் அரசியல் உள்குத்து ஆரம்பமாகிவிடந்தா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்