வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (10/05/2018)

கடைசி தொடர்பு:15:10 (11/05/2018)

"ஐயோ.. அவரா?!" பெரம்பலூரை மிரள வைக்கும் ஏ.டி.எஸ்.பி. ஞான சிவகுமார்!

பெரம்பலூர் ஏ.டி.எஸ்.பி-யாக இருந்த ஞான சிவகுமார் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. ``ஐந்து மாதங்களில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், ஐந்தாறு சிறப்பு உதவி ஆய்வாளர்களைக் கையில் வைத்துக்கொண்டு, மாவட்டத்தில் கட்டாய வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். டிரான்ஸ்ஃபர் வந்தும் போகாமல் இருக்கிறார். இவரின் செயல்பாடுகளால் காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்" என குமுறுகிறார்கள் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர்.

ஏடிஎஸ்பி, தமிழக காவல்துறை

இதுதொடர்பாக காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளிடம் விசாரித்தோம். தங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டாம் எனக் கூறி நம்மிடம் பேசத் தொடங்கினார்கள். ``ஏ.டி.எஸ்.பி. ஞான சிவகுமார் 1987-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர். இவருக்குக் கீழ் பணிபுரிந்த இன்ஸ்பெக்டரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசம் ஸ்டேஷனிலேயே லேடி போலீஸாரிடம் இவர் தவறாக நடந்துகொண்டது பத்திரிகைகளில் வந்து பரபரப்பாகியது. இது ஒருபுறமிருக்க, இவரின் ஆளுகைக்கு உட்பட்ட எட்டு காவல்நிலையங்கள், போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்குப் பிரிவு அலுவலகத்தில் இருந்து மாதம் ஒரு லட்சம் பணம், அரிசி மூட்டை, காய்கறி, பழங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கட்டாய வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இம்மாவட்டத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனையே இல்லாமல் இருந்தது. இவர் வந்த பிறகு லாட்டரிச் சீட்டு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இரு குரூப்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அந்த விற்பனையை வளர்த்து விட்டார். லாட்டரி கும்பல்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலால், பன்னீர் என்பவரை வெட்டிக் கொன்றார்கள். அடுத்ததாக, பாடாலூரில் எஸ்.எஸ்.ஐ யாக இருந்தவர் சுப்பிரமணியன். இவர் பணியில் இருந்தபோது வாக்கிடாக்கியை தொலைத்து விட்டார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி 'உன்மேல் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும். என்னைக் கவனித்துவிட்டால் உன்னைக் காப்பாற்றிவிடுகிறேன்' என மிரட்டினார்.

அவரும் பயந்து போய் பணத்தை கொடுத்துச் சரிசெய்த பின்பு 'வாக்கி டாக்கி' மேட்டரை மிஸ்சிங் கேஸில் போட்டு மூடி மறைத்திருக்கிறார்கள். பின்பு மாதந்தோறும் பணம் கொடுக்க வேண்டுமென்று ஏ.டி.எஸ்.பி. வற்புறுத்தவே சுப்பிரமணியன் மறுத்திருக்கிறார். அதனால் வி.களத்தூர் ஏரியாவுக்கு அவரை டிரான்ஸ்பர் செய்தார். இவருடைய டார்ச்சர் தாங்க முடியாமல் அவர், அரியலூர் மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இவரால் பல போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து ஐ.ஜி-க்கு புகார்கள் சென்றதால், இவரை விருதுநகருக்கு மாற்றம் செய்துள்ளனர். 'இன்னும் ஐந்து மாதங்களில் ஓய்வு பெறப்போவதால், இங்கேயே இருந்து விட்டு ஓய்வு பெற்றுக் கொள்கிறேன்' என்று அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறார். எஸ்.பி., திசா மித்தல், வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழ் சரியாகத் தெரியாது. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தையே கெடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் இம்மாவட்டத்தை விட்டுச் சென்றால்தான் காவலர்கள் மீது நன்மதிப்பு ஏற்படும்" என்று முடித்தார்கள். 

சமூக ஆர்வலர் அருள்சமூக ஆர்வலர் அருள் கூறுகையில், "ஏ.டி.எஸ்.பி. ஞான சிவகுமார், படித்தவர் என்று கருதி, கல்வி நிறுவனங்களில் சிறப்பு அழைப்பாளராக அழைத்தால், எப்படிப் பேசவேண்டும் என்றுகூடத் தெரியாமல் மாணவ, மாணவிகள் முன்னிலையில் இரட்டை அர்த்தத்துடன் பேசுகிறார். அதனால், கல்வி நிறுவனங்கள், 'இவரை ஏண்டா அழைத்தோம்' என்று தலையில் அடித்துக்கொண்டனர். மணல்குவாரி மற்றும் கல்குவாரி முதலாளிகளிடம் மாதந்தோறும் பணம் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். அப்படிக் கொடுக்காதவர்களின் வீடுகளுக்கு போலீஸ்காரர்களே நேரில் போய் மிரட்டிவிட்டு வருவார்கள். கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி க்ரைம் பிரிவில் உதவி ஆணையராக (ஏ.சி) இருந்தபோது, பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் உறவினர்கள், அரசுப் பணிக்கு தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது (குருப்.1, குருப்.4, .வி.ஏ.ஒ.) ஏ.டி.எஸ்.பி-யை நாடியிருக்கிறார்கள். தனக்கு அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ள புரோக்கர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். நீங்கள் பணம் கொடுத்தால் போதும். நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்ச்சி ஆகாமலேயே வேலைவாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் வாங்கியிருக்கிறார். ஆனால்,  வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால் இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் சம்பந்தப்பட்டவர்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது. திருச்சி குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு அப்படியே கிடப்பில் கிடக்கிறது. 

அதேபோல் திருச்சியில் பிரபலமான ஒரு நகைக் கடையில் கொள்ளை நடந்தபோது, அதைக் கண்டுபிடித்து, கைப்பற்றப்பட்ட நகையில் ஒன்றரை கிலோவை இவர் எடுத்துச் சென்று விட்டதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தத் தகவல் ஊடகங்களிலும் செய்தியாக வந்தது. அதேபோல் பல ஏஜெண்டுகளை வைத்துக்கொண்டு இவர் பெரிய அளவில் பஞ்சாயத்து செய்து வந்தார். கடனாகப் பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு, அந்தப் பணத்தைக் கொடுத்தவர்கள், திருப்பிக் கேட்டால் தன்னுடைய அதிகாரத்தை வைத்து மிரட்டியுள்ளார். இதுபோல் பல புகார்கள் அவர் மீது உள்ளன. விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், முடிந்தவரையிலும் சுருட்டிக்கொண்டு போகலாம் என்று நினைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஏ.டி.எஸ்.பி. ஞான சிவகுமாரிடம் பேசினோம். "என்னைப் பிடிக்காதவர்கள் என் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, தேவையில்லாமல் இதுபோன்ற புகார்களை கிளப்பி விடுகிறார்கள். என் மீது எந்தத் தவறுமில்லை. என்னைச் சாதிய வலையில் சிக்கவைத்து, டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். இன்னும் இரண்டு நாள்களில் கிளம்பிவிடுவேன்” என்று கூறி முடித்துக்கொண்டார். 

தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் காவல்துறையின் கண்ணியம் நிலைநாட்டப்படும்.


டிரெண்டிங் @ விகடன்