வெளியிடப்பட்ட நேரம்: 09:44 (10/05/2018)

கடைசி தொடர்பு:10:12 (10/05/2018)

பெரியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்..! புதிய சர்ச்சை

பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கான இரண்டு சிண்டிகேட் உறுப்பினர்கள் பதவி காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு,  நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் பாலகுருநாதனும், இதழியல் துறை பேராசிரியர் நடராஜனும் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்கள். இதில், நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் பாலகுருநாதனை நியமனம்செய்தது தவறு என்று சில பேராசிரியர்கள் போர்க்கொடி தூக்கிவருகிறார்கள்.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் கேட்டதற்கு, ''பெரியார் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறை பேராசிரியராக இருப்பவர் பாலகுருநாதன். இவரைப் பேராசிரியராக நியமனம் செய்ததே தவறு. பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைப்படி, கிராஸ் மேஜர் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பாலகுருநாதன் பி.எஸ்சி-யில் விலங்கியலும், எம்.எஸ்சி, எம்.பில் கடல் வாழ் உயிரியலும் கடலியல் பாடமும், பிஹெச்.டி-யில் கடல் வாழ் உயிரியல் பாடம் என கிராஸ் சப்ஜெக்ட் எடுத்து படித்திருப்பதால், இவர் ஆசிரியர் பணிக்குத் தகுதியற்றவர்.

இது சம்பந்தமாக 2016-ம் ஆண்டு சேலம் அரசு கலைக்கல்லூரியில் இணைப் பேராசிரியராக இருக்கும் அழகேச பூபதி என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் நுண்ணுயிரியல் பாடமும், கடல் வாழ் உயிரியல் பாடமும் சமமான பாடமா என்று கேட்டதற்கு, இல்லை என்று அவர் படித்த அண்ணாமலை பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித் துறையும் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

அதையடுத்து,  பெரியார் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறை பேராசிரியராக பாலகுருநாதன் நியமனம் தவறு என்று அழகேச பூபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதை மறைத்து, கவர்னரின் ஒப்புதல் பெற்று பாலகுருநாதனை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்து இருக்கிறார்கள்'' என்று கொந்தளிக்கிறார்கள்.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் பாலகுருநாதனிடம் பேசியபோது, ''நான் 1983-ல் பி.எஸ்சி  விலங்கியல் படித்தேன். எம்.எஸ்சி கடல் வாழ் உயிரியலும், கடலியலும் படித்தேன். பி.எஸ்சி விலங்கியல் படித்தால் மட்டுமே கடல் வாழ் உயிரியல் பாடம் படிக்கத் தகுதி உடையது. அதனால் நான், கிராஸ் மேஜர் கிடையாது. பெரியார் பல்கலைக்கழகத்தில் என்னைப் பேராசிரியராகத் தேர்வுசெய்வதற்குத் தகுதி வாய்ந்த பல கமிட்டிகள் மூலமே நியமிக்கப்பட்டிருக்கிறேன். அழகேச பூபதி என்பவர் வழக்குப் போட்டார். அது, விசாரணைக்கே வரவில்லை. எனக்கு வேண்டப்படாதவர்கள் சிலர், இப்படித் தவறான தகவல்களைக் கூறிவருகிறார்கள்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க