வெற்றி மகிழ்ச்சியில் நெடுவாசல் மக்கள்!

நெடுவாசல் பகுதி மக்கள், தம் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ள மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
 
நெடுவாசல்
 
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும்  திட்டத்துக்கு, கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும்,  இந்தத் திட்டத்தைத் செயல்படுத்த ஜெம் லெபாரட்டரீஸ் எனும் கர்நாடக நிறுவனத்துடன்  ஒப்பந்தம் போடப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக, நெடுவாசலைச் சுற்றியுள்ள வடகாடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் போராட்டம் வெடித்தது.  நெடுவாசலில், சுமார் 100 நாள்களுக்கும் மேலாகப் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் 'சேவ் நெடுவாசல்' எனும் முழக்கத்தை முன்வைத்துப் போராடினர். 
 
போராட்டங்களின் விளைவாக தமிழக அரசு, நிலங்களைக் குத்தகை முறையில் ஜெம் நிறுவனத்துக்கு மாற்றித் தரவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுவாசல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளிக்க மாட்டோம் என உறுதியளித்தார். மாவட்ட நிர்வாகமும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக போராட்டங்களின் வீரியம் குறைந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் போராட்டம் நடத்தியவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, கடந்த சில தினங்களுக்கு முன், நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இந்நிலையில் நேற்று, பி.ஜே.பி நிர்வாகி ஹெச்.ராஜா, நெடுவாசலில் உள்ளூர் மக்கள் போராடவில்லை என்றும், அங்கு போராடும் மக்களுக்கு யார் பணம் தருகிறார்கள் என்பதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் எனப் பேசி பரபரப்பை உண்டாக்கினார். இது, அப்பகுதி மக்களை கொதிப்படையச் செய்திருந்தது.  
 
இந்நிலையில், ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனம் மற்றும் மத்திய அரசுகள் பலமுறை கடிதங்கள் அனுப்பியும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த ஏற்கெனவே ஒ.என்.ஜி.சி-க்கு அளிக்கப்பட்டிருந்த குத்தகையை ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனத்துக்கு தமிழக அரசு மாற்றித் தரவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனம், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்கும் என்ற நம்பிக்கை இல்லை. திட்டம் தொடங்க தாமதம் ஆவதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேறு இடம் ஒதுக்கித் தரவேண்டும்' என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக தேசிய பசுமைத்  தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

அடுத்தடுத்த நகர்வுகளால், நெடுவாசல் மீண்டும் பரபரப்பக் தொடங்கியுள்ளது. இன்னும் சில மணித் துளிகளில் நெடுவாசல் மாரியம்மன் கோயில் மைதானத்தில் மக்கள் திரளுவதாலும், ஊடகங்கள் வருகையாளும் நெடுவாசல் போராட்டக்களம் அனல்பறக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!