'சிரமமாய் இருக்கிறது; மதுரை வரை ரயிலை நீட்டியுங்கள்'- கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்

காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான ரயிலை மதுரை வரை நீட்டிக்க, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் ரயில்வே துறைக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டுவருகின்றன. இந்த மனுக்கள்மீது ரயில்வே நிர்வாகம் இரண்டு மனசாக இருப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்துவருகிறார்கள்.


இதுகுறித்து காரைக்குடி சமூக ஆர்வலரான ஆதிஜெகநாதனிடம் பேசும்போது,  ''காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை அகல ரயில்பாதை பணிகள் முடிந்து, கடந்த மார்ச் 30-ம் தேதி பயணிகளுடன் சோதனை ரயில் இயக்கப்பட்டது. இந்த  ரயில், கடந்த ஏப்ரல் மாதம் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை இந்த ரயில் சேவை தொடங்கப்படவில்லை. இதற்கு முன், பட்டுக்கோட்டையிலிருந்து காலை நேரத்தில் ரயில் இயக்கப்பட்டது. இதனால், அழகப்பா பல்கலைக்கழகம், சிக்ரி அரசுத் துறையில் பணிபுரிகிறவர்கள் மற்றும் மாணவர்கள் சரியான நேரத்துக்கு வந்து செல்வதற்கு வசதியாக இருந்தது. ஆனால் தற்போது, காரைக்குடியிலிருந்து  பட்டுக்கோட்டைக்கு ரயில் செல்லும்போது, அந்த வசதி இல்லாமல் சிரமப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ரயில் சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு இயக்கப்பட்டால், வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் மருத்துவம் பார்ப்பதற்குச் செல்லும் நோயாளிகளுக்கு வசதியாக இருக்கும். தற்போது, பஸ்களில் அதிகமான கட்டணம் கொடுத்துப் பயணிக்கவேண்டி இருக்கிறது. அதனாலேயே, மக்கள் கூட்டம் ரயிலை நோக்கிப்போகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், மதுரை வரைக்கும் ரயிலை நீட்டிக்க விடாமல் தடைபோட்டுவருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும்  இருக்கிறது'' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!