மனைவியைப் பிடிக்கச் சென்ற சென்னை போலீஸாருக்கு கணவன் கொடுத்த அதிர்ச்சி

 ரவுடி குப்பன்

சென்னை கண்ணகி நகரில், மதுபானம் விற்ற பெண்ணை போலீஸார் பிடிக்கச் சென்றனர். அப்போது, அவரின் கணவர்,  பிளேடால் தன் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர், குப்பன். பிரபல ரவுடியான இவர்மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வழிப்பறி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட குப்பன், கடந்த பத்து நாளுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்தார். கண்ணகி நகர் பகுதியில் மதுபானம் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, குப்பனின் மனைவி தீபிகாவின் வீட்டில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவது தெரியவந்தது.

உடனே போலீஸார், அவரது வீட்டிலிருந்து மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்ததோடு, அவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த குப்பன், போலீஸாரின் ஜீப்பை வழிமறித்தார். போலீஸார் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்தச் சமயத்தில்,  குப்பன் தன் கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை  அறுத்தார். அவரது கழுத்திலிருந்து ரத்தம் வழிந்தது. உடனே போலீஸார், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து குப்பனுக்கு முதலுதவி அளித்தனர். பிறகு, மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் குப்பனையும் அவரது மனைவி தீபிகாவையும் எச்சரித்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "கண்ணகி நகர் காவல் நிலைய ரவுடிகள் பதிவேட்டில் குப்பனின் பெயர் உள்ளது. இவருக்கும் இன்னொரு ரவுடி கும்பலுக்கும் முன்விரோதம் இருந்துவருகிறது. குப்பனைக் கொலைசெய்ய அந்த ரவடிக் கும்பல் திட்டமிட்டுவருகிறது. கஞ்சா விற்பனை, அடி தடி, கொலை முயற்சி, வழிப்பறி எனத் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குப்பனை, நாங்கள் பிடிக்கச் சென்றால் பிளேடால் உடலை அறுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதுவரை 60 இடங்களுக்கும் மேல் பிளேடால் உடலில் அறுத்திருக்கிறார். இந்த முறை மனைவிக்காக கழுத்தை அறுத்துள்ளார்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!