வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (10/05/2018)

கடைசி தொடர்பு:19:38 (10/05/2018)

``கேப்டவுனைப் போல இந்தியாவில் 19 நகரங்கள் இருக்கின்றன..!" - தண்ணீர் மனிதனின் அலெர்ட்

நதிகளை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் வறட்சியை ஒழிக்க முடியாது, இது அரசியல் செய்வதற்கு மட்டுமே தீர்வைத் தரும். தேசிய நதிகளை இணைப்பதால், தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை.

``கேப்டவுனைப் போல இந்தியாவில் 19 நகரங்கள் இருக்கின்றன..!

ந்தியாவின் 'தண்ணீர் மனிதர்' என அழைக்கப்படும் ராஜேந்திரசிங், நேற்று திண்டுக்கல்லில் நடந்து வரும் பல்வேறு நீர்நிலைகள் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டார். குறிப்பாக நிலக்கோட்டை ஒன்றியத்தில் நீலமலைக்கோட்டைப் பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த மிகப்பெரிய நீர்பிடிப்புப் பகுதியை மீட்டெடுத்து நடந்து வரும் பணிகளைப் பார்வையிட்டார். மகரிஷி வித்யா மந்திர் மற்றும் திண்டி மா வனம் குழுவினர் அவரை அழைத்து வந்திருந்தனர். நீர்நிலைகளைப் பார்வையிட்ட பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ராஜேந்திரசிங், ''இதுவரை நாங்கள் ஏழு நதிகளை புணரமைத்துள்ளோம். தூர்ந்துப்போன அந்த நதிகளில் எல்லாம் தற்போது தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மண் வளம் சிறப்பாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் மட்டுமே வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சி ஏற்படுவதற்கு ஆறுகளில் மணல் அள்ளப்படுவதும் ஒரு காரணம். மணல் அள்ளுவதற்கான நெறிமுறைகளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை இணைந்து வகுத்துள்ளது. அதன்படி எந்த ஒரு நீர்நிலையிலும் மணல் அள்ளக்கூடாது எனச் சட்டம் உள்ளது. அதை முறையாகப் பின்பற்ற வேண்டும். மக்களும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ராஜஸ்தானில் தண்ணீர் சேமிப்புத் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 7 ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில், குறைந்த அளவிலேயே மழை பொழியும். ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால், தற்போது வறட்சி ஒழிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துடன் ஒப்பிடும்போது, பல மடங்கு அதிக மழைப் பொழிவை பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இருபது சதவிகிதம் மழை பெய்யும் ராஜஸ்தானில் ஆறுகளில் தண்ணீரை ஒடவிடும்போது எண்பது சதவிகிதம் மழை பெய்யும் தமிழகத்தின் ஆறுகள் வறண்டு கிடப்பது வியப்பாகவும் வேதனையாகவும் கண்ணீரை வரவழைப்பதாகவும் இருக்கிறது.

ராஜேந்திரசிங் தண்ணீர்  மனிதன்

நதிகளை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் வறட்சியை ஒழிக்க முடியாது, இது அரசியல் செய்வதற்கு மட்டுமே தீர்வைத் தரும். தேசிய நதிகளை இணைப்பதால், தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. இரு மாநிலங்களில் ஓடும் காவிரி பிரச்னையே தீரவில்லை. இந்த நிலையில், தேசிய நதிகளை இணைப்பதால் பிரச்னைகள் அதிகரிக்கும். தமிழகத்தில் கிடைக்கும் மழை நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை முறையாகச் செய்தால் எந்த மாநிலத்திடமும் தண்ணீர் கேட்டு, தமிழகம் கை ஏந்தத் தேவையில்லை. காவிரி ஆற்றுப் பகுதிகளை நாங்கள் பார்வையிட்டோம். அந்தப் பகுதிகள், ராஜஸ்தான் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து வருகிறோம். 

ராஜேந்திரசிங்ஆறு குளங்கள் போன்ற நீர் நிலைகள் தாய்க்கும் மேலாக போற்றப்பட வேண்டும் கடவுளுக்கும் மேலாக வணங்கப்பட வேண்டும். ஆனால், இங்குள்ள நீர் நிலைகளின் நிலைமை நேர்மாறாக இருக்கிறது. எத்தனையோ தலைமுறையை வாழவைத்த நீர் நிலைகள் இன்னும் பல தலைமுறையை வாழவைக்கவேண்டாமா? தமிழகத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் வறட்சியை எளிதாக விரட்ட முடியும்.இதற்கு நீதிக்குழு ஒன்று அமைக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோரை இணைத்து தண்ணீர் விழிப்பு உணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். 

திண்டுக்கல் நீலமலைக்கோட்டைப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் அற்புதமானது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் இருந்து அதை மீட்டெடுக்கும் பணியானது இந்தியாவுக்கே முன்னுதாரனமாக இருக்கிறது. கிடைக்கும் நீரைக் கொண்டு சாகுபடி செய்வதற்கு ஏற்ப விவசாயிகள் திட்டமிட வேண்டும். மழைக்கு ஏற்ப சாகுபடி முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தென்னை போன்ற நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் பயிர்களை தவிர்த்து, மண்ணின் நலம் அறிந்து விவசாயம் செய்ய வேண்டும். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரைப் போலவே, இந்தியாவில் 19 நகரங்கள் தண்ணீர் இல்லாமல் இருக்கின்றன. இதற்கு முறையான நீர்மேலாண்மை இல்லாததே காரணம். சென்னையில் பெய்யும் மழைநீர் முழுவதும் கடலில் கலக்க விட்டுவிட்டு, தண்ணீர்த் தட்டுப்பாட்டை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். எனவே, நீர் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்