வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (10/05/2018)

கடைசி தொடர்பு:15:00 (10/05/2018)

சங்குமால் கடற்கரையில் பூங்கா அமைக்க எதிர்ப்பு; கடலில் இறங்கி போராடும் மீனவர்கள்

 ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரை பகுதியில் சிறு தொழில் மீனவர்கள் பயன்படுத்தி வரும் கடலோரத்தில்  பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கட்டுமரங்களுடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரைப் பகுதியில், சிறு தொழில் மீனவர்கள் பயன்படுத்திவரும் கடலோரத்தில்  பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமரங்களுடன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக மத்திய- மாநில அரசுகள் ஒவ்வோர் ஆண்டும் பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கின்றன. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள் முறையான ஆய்வு மற்றும் ஆலோசனை இன்றி, பெயரளவுக்கு மட்டுமே ஏற்படுத்தப்படுகின்றன. சாலை வசதி, கழிப்பறை வசதி, வாகனங்கள் நிறுத்தும் வசதி மற்றும் பூங்காக்கள் போன்ற அனைத்துத் திட்டங்களுமே பயனற்றுக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பூங்கா அமைப்பது, தரமற்ற முறையில் சாலை அமைப்பது, பயன்படுத்த முடியாத இடங்களில் கழிப்பறைகள் கட்டுவது என பெரும்பகுதியான திட்டங்கள் அரசு நிதியை வீணடிக்கும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தற்போது, புதிதாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் மீனவர்கள் பயன்பாட்டில் இருந்துவரும் சங்குமால் கடற்கரைப் பகுதியில் பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட அனைத்துப் பூங்காக்களுமே பராமரிப்பின்றியும் பயன்பாடு இன்றியும் இருந்துவரும் நிலையில், தற்போது புதிய பூங்கா உருவாக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும், தற்போது பூங்கா அமைய தேர்வுசெய்யப்பட்டுள்ள சங்குமால் கடற்கரை பகுதி, நாட்டுப்படகு மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன்பிடிக்கும் மீனவர்கள் பயன்படுத்திவரும் பகுதியாகும். இங்குள்ள மீனவர்களை அப்புறபடுத்திவிட்டு, அங்கே பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறு தொழில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுவரும் நூற்றுக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், தொழிலையும் பாதிக்கும் வகையில் அமைய உள்ள இந்தப் பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்குமால் பகுதி நாட்டுப்படகு, கட்டுமர மீனவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஏற்கெனவே உள்ள பூங்காவை மேம்படுத்தி, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதை விட்டுவிட்டு, புதிய பூங்கா என்ற பெயரில் அரசு நிதியை விரயம் செய்ய அதிகாரிகள் திட்டமிடுவதுடன், தங்களின் தொழில் சார்ந்த வாழ்விடங்களை அபகரிக்க முயல்வதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.