வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (10/05/2018)

கடைசி தொடர்பு:14:20 (10/05/2018)

இனி, டிஜிட்டல் முறையில் அபராதம்! சென்னை டிராஃபிக் போலீஸ் அதிரடி முடிவு

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் பெறும் அபராதத்தைக் காவல்துறையினர் இனி ரொக்கமாகப் பெறமுடியாது என்று சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முழுவதும், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்துக் காவல்துறையினர் கடுமையான சோதனைகளில் ஈடுபட்டு அபராதம் வசூலித்துவந்தனர். அதனால், காவல்துறையினர் பொதுமக்களிடம் ரொம்பவே அத்துமீறுவதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தன. இந்த நிலையில், சென்னை வேப்பேரியிலுள்ள காவல்துறை ஆணையர் அலுலவகத்தில், டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் முறையை சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். அப்போது, இந்தத் திட்டம்குறித்து காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, 'சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் பெறும் அபராதத்தைக் காவல்துறையினர் இனி பணமாகப் பெறமுடியாது. வாகன ஓட்டிகள் அபராதத்தை ரொக்கமாகச் செலுத்த வேண்டும் என்றால், ஈ-சேவை மையம் அல்லது தபால் அலுவலகத்தில்தான் செலுத்த வேண்டும். பொதுமக்கள் பே டிஎம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் அபராதத் தொகையை செலுத்தலாம். 48 மணி நேரத்துக்குள் தபால் நிலையத்தில் பணம் செலுத்தலாம். டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்துவதால், ஒரு முறைக்கு மேல் பணம் செலுத்தவேண்டியிருக்காது' என்று தெரிவித்தார்.