வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (10/05/2018)

கடைசி தொடர்பு:14:03 (10/05/2018)

உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்ட 'அந்த' உதாரணக் கேள்வி! - TNPSC முதல் UPSC வரை

உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்ட 'அந்த' உதாரணக் கேள்வி! - TNPSC முதல் UPSC வரை

முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள் - அறிவியல் - உயிரியல் ஸ்பெஷல் #28

TNPSC

போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரையில் இயற்பியல், வேதியியல் போன்றுதான் உயிரியலும். ஒருசில கேள்விகள் UPSC தேர்விலும் கணிசமான அளவு கேள்விகள் TNPSC தேர்வுகளிலும் கேட்கப்பட்டுள்ளன. மற்ற அறிவியல் பாடங்களைப் போன்று அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் உயிரியல் சார்ந்த நிகழ்வுகளுக்கும் தேர்வு நடக்கும் ஆண்டில் செய்திகளில் வலம்வரும் உயிரியல் சார்ந்த தலைப்புகள் - குறிப்பாக உயிரினங்களின் பெயர்கள், பரவலாகக் காணப்படும் நோய்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

உதாரணமாக, 2013-ம் ஆண்டு சிக்குன்குனியா நோய் நாடெங்கும் பரவலாகக் காணப்பட்ட காலகட்டம். அந்த ஆண்டு UPSC முதன்மைத் தேர்விலும் சிக்குன்குனியா பற்றிய கேள்வி இடம்பெற்றது. அதேபோல் 2015-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சலைப் பற்றிய கேள்வியும் 2017-ம் ஆண்டு ஸிகா வைரஸ் (Zika Virus) பற்றிய கேள்விகளும் UPSC முதன்மைத் தேர்வில் இடம்பெற்றன. ஆக, அன்றாட நிகழ்வுகள் சார்ந்த உயிரியல் பாடங்களைப் படிப்பது மிக அவசியம்.

அடுத்ததாக செல் பற்றிய முக்கிய அம்சங்கள், செல்லின் முக்கிய அங்கங்கள், தாவரங்களின் உருவ அமைப்பு, முக்கிய அங்கங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வகைப்பாடு போன்ற அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது மிக அவசியம். குறிப்பாக, வகைப்பாடு குறித்த கேள்விகள் போட்டித்திறன் தேர்வுகளில் அதிகமாகவே இடம்பெற்றுள்ளன. 

உதாரணக் கேள்வி (UPSC 2013): 

இவற்றில் எவை பாலூட்டி? (Mammals)

1) கடல் பசு 

2) கடல் குதிரை

3) கடல் சிங்கம் 

1 only 

1 and 3 ( பதில்)

2 and 3 

All of these 

அடுத்ததாக, முக்கிய உடல் உறுப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். மருத்துவப் படிப்பு அளவுக்குப் பார்க்கத் தேவையில்லை. உடல் உறுப்பின் பெயர் மற்றும் அதன் செயல்பாடுகள், அம்சங்கள், செயல் இழப்பு / குறைபாடுகளால் ஏற்படும் முக்கிய நோய்கள் ஆகியவற்றை ஓர் அட்டவணையாக அமைத்துக்கொண்டு படிப்பது பயனுள்ளதாக அமையும். அதேபோன்ற அட்டவணை ஒன்றை தாவரங்களின் உறுப்புகளுக்காகவும் அமைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணக் கேள்வி (UPSC 2011)

ஒரு மரத்தின் பட்டையை வட்டமான (circular) முறையில் அதன் அடிப்பகுதியைச் சுற்றி அகற்றினால், காலப்போக்கில் அது காய்ந்து, வாடி இறந்துவிடும். எதனால் இப்படி ஏற்படுகிறது?

1) பூமியில் உள்ள நீர், தாவரத்தின் மேல் பகுதிகளுக்கு உயர முடியாது (பதில்).

2) வேர்கள் சக்தியில்லாத நிலையை அடைந்துவிடுகின்றன (starvation).

3) மரம், பூமியில் உள்ள கிருமிகளால் நோய்க்கு உள்ளாகிறது.

4) வேர்கள் சுவாசிக்கும் அளவுக்கு அவற்றுக்கு ஆக்ஸிஜன் (oxygen) கிடைப்பதில்லை.

இந்தக் கேள்வி மரத்தின் செயல்பாடுகளைப் பற்றியக் கேள்விதான். ஆனால், கேள்வி நேரடியாகக் கேட்கப்படவில்லை. பெரும்பாலான UPSC கேள்விகள் இப்படித்தான் அமையும். மேலே குறிப்பிட்ட கேள்வியைப் பொறுத்தவரை மரப்பட்டையின் பயன்கள், மர வேரின் பயன்களைப் பற்றித் தெரிந்திருந்தால் எளிதில் பதிலளித்துவிடலாம். நாம் படித்தவற்றை எல்லாம் சற்று கோவையாகச் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இப்படி கோவையாகச் சிந்தித்துப்பார்க்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், பெரும்பாலான கேள்விகளை எளிதில் சமாளித்துவிடலாம். 

உயிரியல் பாடம் என்பது, மிகவும் நுட்பம் வாய்ந்தது. பொருளாதாரத்தில் பார்த்ததுபோல் முக்கியத் துறைச் சொற்களுக்கு எளிய அர்த்தங்களையும் விளக்கங்களையும் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்ததாக, மரபியல் (genetics) சார்ந்த தலைப்புகளில் கவனம் செலுத்துவது மிக அவசியம். மென்டலின் தியரி, பல்வேறு DNA மற்றும்  RNA மாடல்கள், DNA மற்றும் RNA-வின் முக்கியச் செயல்பாடுகள், அம்சங்கள், செயல்பாட்டை இழக்கும்போது ஏற்படும் பல்வேறு கோளாறுகள் மற்றும் நோய்கள், ரத்த வகுப்புகள், ரத்த வகுப்புகளின் மரபியல் ஆகியவற்றைப் படித்துக்கொள்ளுங்கள்.

உதாரணக் கேள்வி (UPSC 2011) 

திருமணமான தம்பதி, ஓர் ஆண் குழந்தையைத் தத்து எடுத்தனர். சில வருடங்களுக்குப் பிறகு, அந்தத் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அந்தத் தம்பதியின் ரத்த வகுப்பு AB+ மற்றும் O+. அவர்களின் மூன்று மகன்களின் ரத்த வகுப்புகள்  A+, B+ மற்றும் O+ ஆகும். இதில் தம்பதியின் தத்துப்பிள்ளையின் ரத்த வகுப்பு எது? 

O+

A+

B+

கொடுக்கப்பட்டுள்ள தகவலை வைத்து கண்டுபிடிக்க இயலாது (பதில்)

இறுதியாக, நாம் படிக்கவேண்டியவை மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதிக்கும் அனைத்துவகை நோய்களைப் பற்றியும், மனித நோய்களைப் பொறுத்தவரை தொற்றுநோய், தொற்றாத நோய்கள் எனப் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஒவ்வொரு நோய்க்கும்...

1. காரணம் (etiology) மற்றும் தொற்றுநோய் என்றால் கிருமியைப் பற்றிய அடிப்படை விவரம் (பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவை பெயர்களுடன்)

2. பரவும் / ஏற்படும் வழி / முறை ( Transmission / pre disposing factors )

3. நோய் எந்தப் பகுதியைத் தாக்கும்

4. நோயின் அம்சங்கள்

5. முக்கியச் சிகிச்சை முறைகள்

ஆகிய ஐந்து தலைப்புகளில் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். இந்தத் தலைப்பு மிக முக்கியம். மனித நோய்களைப்போலவே விலங்குகளின், தாவரங்களின் முக்கிய நோய்களைப் பற்றியும் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். 

TNPSC

மேலே சொன்னதுபோல நம் தேர்வுக்குத் தேவையான அளவில் இந்தப் பாடங்களை முழுமையாகப் படித்தாலே போதும். உயிரியல் சார்ந்த கேள்விகளில் சுலபமாகச் சாதிக்கலாம். 

- மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கலாம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்