வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (10/05/2018)

கடைசி தொடர்பு:14:05 (10/05/2018)

சுற்றுச்சூழல் என்னும் துருப்புச்சீட்டு! - TNPSC முதல் UPSC வரை

சுற்றுச்சூழல் என்னும் துருப்புச்சீட்டு! - TNPSC முதல் UPSC வரை

முதன்மைத் தேர்வுக்கான பொதுப்பாடங்கள் - சுற்றுச்சூழல் பகுதி-2    #31

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் பகுதியில் நாம் முதலில் பார்க்க இருப்பது பல்லுயிர் பெருக்கம் குறித்து (Biodiversity). பல்லுயிர்களின் பல்வேறு நிலைகள், அவற்றின் முக்கியத்துவம், பல்லுயிர்ப் பாதிப்புகளுக்கான முக்கியக் காரணங்கள், பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் - டிராப்பிக்கல் ரெயின் ஃபாரெஸ்ட்(tropical rain forest), கோரல் ரீஃப் (Coral reef) போன்றவை. இந்திய அளவில் கிழக்கு இமாலயப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், உயிர் புவியியல்சார் வகைபாடு (இந்தியவில் உள்ள 25 பகுதிகள்) ஆகியவற்றைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள், தேசிய, சர்வதேச அளவிலான முயற்சிகள் ஆகிய தலைப்புகள், நம் தேர்வுகளுக்கு முக்கியம். தேசிய உயிரியல் பூங்காக்கள், வன சரணாலயங்கள் பற்றி இப்போது பார்க்கலாம். மாநிலம்வாரியாக உயிரியல் பூங்காக்கள், வன சரணாலயங்கள், பல்லுயிர் பாதுகாப்புப் பகுதிகள் எனப் பட்டியல் அமைத்து ஒவ்வொன்றின் முக்கியத்துவத்தையும் அங்கு உள்ள முக்கிய உயிரினங்களைப் பற்றியும் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

உதாரணக் கேள்வி 

1) அச்சனக்மர் சரணாலயம், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது.

2) போன்ட்லா சரணாலயம், கோவா மாநிலத்தில் உள்ளது.

3) சூல்பனேஷ்வர் சரணாலயம், குஜராத் மாநிலத்தில் உள்ளது.

 

இவற்றில்  

1 and 3 are correct 

1 and 2 are correct

2 and 3 are correct

All are correct ( பதில்) 

முக்கிய உயிரினங்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அரசுத் திட்டங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். புராஜெக்ட் டைகர், புராஜெக்ட் எலிஃபண்ட், புராஜெக்ட் வல்ச்சர், புராஜெக்ட் ரைனோ உள்பட ஆமைகள், திமிங்கிலங்கள், பனிச்சிறுத்தை உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் பாதுகாப்புக்கான அரசுத் திட்டங்கள் மிக முக்கியம். அதேபோல், பல்லுயிர்ப் பாதுபாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு தேசிய அளவில் (பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா, ஜுவாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா, ஃபாரஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா, தேசிய பல்லுயிர்ப் பாதுகாப்புச் செயல் திட்டம் (National Biodiversity Action plan), தேசிய வனப் பாதுகாப்புச் செயல்திட்டம் (National Wildlife Action Plan), வனப் பாதுகாப்புச் சட்டம் (Wildlife Protection Act 1972), பல்லுயிர்ப் பன்முகத்தன்மைச் சட்டம் (Biological Diversity Act 2002) அமைப்புகள் மற்றும் சட்டங்கள், சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள கார்டாஜெனா புரோட்டோகால் (Cartagena protocol), ரோட்டர்டாம் கன்வென்ஷன் (Rotterdam Convention), ஸ்டாக்ஹோம் கன்வென்ஷன் (Stockholm convention), நகோயா புரோட்டோக்கால் (Nagoya protocol), CITIES, WWF போன்றவற்றைப் பற்றியும் படிப்பது அவசியம்.

அடுத்து நாம் பார்க்க இருப்பது பருவநிலை மாற்றம் (Climate Change) மற்றும் உலக வெப்பமயமாதல் (Global Warming). பருவநிலை மாற்றத்துக்கான பல்வேறு காரணங்கள்...

1. இயற்கையான காரணங்கள்  - சூரிய ஒளியின் நடவடிக்கைகள் (Sun spot activity), கண்டத்தின் சறுக்கல் (Continental Drift), மிலன்கோவிட்ச் சுழற்சிகள் (Milankovitch cycles), எரிமலைகளால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை.

2. செயற்கை / மனிதன் உருவாக்கிய - காடுகளை அழித்தல், எரிபொருள் பயன்பாடு (fossil fuels), அதிகப்படியான தொழில்மயமாதல், நகரமயமாதலின் வெளிப்பாடு போன்றவை. அதேபோல், ஓஸோன் மண்டலத்தில் ஏற்படும் சிதைவுகள் (ozone layer depletion), உலக வெப்பமயமாதல் (Global warming), அமில மழை (Acid rain) ஆகியவை புவியியல்ரீதியான சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான முக்கியக் காரணங்கள். அவற்றைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். 

கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, குளோரோ ஃபுளூரோ கார்பன் (CFC) போன்ற கிரீன் ஹவுஸ் வாயுக்களைப் (Green House Gases) பற்றியும் அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பற்றியும் கேள்விகள் பல முறை கேட்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளைப்போல் இந்தப் பகுதியிலும் பல துறைச்சொற்கள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்வது மிக அவசியம்.

அவற்றில் சில உதாரணங்கள் இதோ...

கார்பன் கிரெடிட் (Carbon credit) - 1 டன் கார்பன்டை ஆக்ஸைடு (அல்லது அதற்கு இணையான கரிபொருள் கலவை) வெளியேற்றப் பெறப்படும் அனுமதி. 

கார்பன் டிரேடிங் (carbon trading) - கார்பன் கிரெடிட்டின் மூலம் வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வெளியேற்றும் நிறுவனங்கள், அவற்றுக்குள் கார்பன் கிரெடிட்களை விற்பனை செய்யும் முறை.

கார்பன்டை ஆக்ஸைடு சீக்குவெஸ்ட்ரேஷன் (Carbon Dioxide Sequestration) - தொழிற்சாலைகளில் வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடை பூமிக்கு அடியில் செலுத்தும் முறை.

சுற்றுச்சூழல்

பருவநிலை மாற்றம் குறித்த இந்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் (நேஷனல் சோலார் மிஷன், நேஷனல் வாட்டர் மிஷன், நேஷனல் ஆக்‌ஷன் ப்ளான் ஆன் க்ளைமேட் சேஞ்ச் (மிக முக்கியம்) போன்றவையும் எர்த் சம்மிட், அஜென்டா 21, CoP மாநாடுகள் போன்ற சர்வதேச அளவிலான நடவடிக்கைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இறுதியாக, நிலையான முன்னேற்றம் (sustainable development) குறித்தும் அதன் பல்வேறு அளவுகோல்கள், வழிமுறைகள் - சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையிலான பல்வேறு ஆற்றல்களின் பயன்பாடு, பயோ ரெமடியேஷன் (bio remediation) முறைகள், நிலையான விவசாயம் (Sustainable Agriculture) போன்ற தலைப்புகளை நன்றாகப் படித்துக்கொள்ளுங்கள். முன்னரே கூறியதுபோல சுற்றுச்சூழல் ரொம்ப எளிமையானதாகவும் பாடங்கள் குறைவானதாகவும் அதே சமயம் அதிக கேள்விகளும் வரக்கூடிய பகுதி.

இது, உங்கள் கையிலேயே இருக்கும் துருப்புச்சீட்டு. நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! 

- மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கலாம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்