எல்.கே.ஜி வகுப்புக்கு ஒரு லட்சம் ரூபாய்! - தகிக்கவைக்கும் தனியார் பள்ளிகள்

ஒவ்வோர் ஆண்டும் கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை நினைத்துக் கவலைப்படுகின்றனர் பெற்றோர்கள். இந்த ஆண்டுக்கான கட்டணம் எவ்வளவு என ஒவ்வொரு பள்ளிகளும் அனுப்பும் மெசேஜைப் பார்க்கவே பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். 'சிங்காரவேலன் கமிட்டி, பள்ளிகளுக்கு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தில், 10 சதவிகிதத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் பெற்றோர். 

பள்ளிகள்

சென்னையில் உள்ள பிரபலமான ஒரு பள்ளி, பெற்றோர்களுக்கு ஒரு தகவலை அனுப்பியிருக்கிறது. அதில், 'இரண்டாம் வகுப்புக்கு ரூ.47,250. மூன்றாம் வகுப்புக்கு ரூ.47,900. நான்காம், ஐந்தாம் வகுப்புக்கு 47,950. ஆறாம் வகுப்புக்கு ரூ.49,050. ஏழாம் வகுப்புக்கு ரூ.41,000. எட்டாம் வகுப்புக்கு ரூ.40,750. ஒன்பதாம் வகுப்புக்கு ரூ.42,000. பத்தாம் வகுப்புக்கு ரூ.39,050-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டு, கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசி தேதியையும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச் சங்க மாநிலத் தலைவர் அருமைநாதனிடம் பேசினோம். " தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயம் தொடர்பாக, சிங்காரவேலன் தலைமையிலான கமிட்டியை அமைத்தது. அந்தக் கமிட்டி, நான்காயிரம் பள்ளிகளுக்குக் கட்டணத்தை நிர்ணயம்செய்தது. மீதமுள்ள பள்ளிகளுக்குக் கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. தற்போது, நீதிபதி மாசிலாமணி தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கமிட்டியும் பள்ளிகளில் உள்ள கட்டமைப்புகள், ஆசிரியர்கள், வகுப்புகள் ஆகியவற்றை அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயித்துவருகிறது. மே அல்லது ஜூன் மாதத்தில்தான் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் சூழல் நிலவுகிறது. ஆனால், அதற்குள் கல்விக்கட்டணத்தை பள்ளிகள் வசூலித்துவிடும். இதனால் இந்த ஆண்டும் பள்ளிகள் கேட்கும் கல்விக் கட்டணத்தைக் கொடுக்கும் நிலைக்குப் பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சிங்காரவேலன் கமிட்டி பள்ளிகளுக்கு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தில் 10 சதவிகிதத்தை உயர்த்தி கல்விக் கட்டணத்தை வசூலிக்கின்றனர்' என்றார் வேதனையுடன். 

தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கப் பொதுச் செயலாளர் நந்தக்குமாரிடம் பேசினோம். " தமிழகத்தில் கல்விக் கட்டண கொள்ளைக்கு அரசால் நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை இருந்துவருகிறது. இதனால், பெற்றோர்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். சென்னையில் பெயர் பெற்ற சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புக்கு ஒரு லட்சத்துக்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய பள்ளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

அரசுப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவனுக்கு அரசு செலவழிக்கும் தொகையை கல்விக் கட்டணமாக நிர்ணயித்தால் கல்விக் கட்டண பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மாறுபட்ட கல்விக் கட்டணத்தால்தான் பிரச்னை ஏற்படுகிறது. மேலும், பள்ளி அங்கீகாரம், சொத்துவரி, வாடகை, ஆசிரியர் சம்பளம் என அனைத்தையும் கணக்கில் கொண்டு கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் பள்ளியின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவேண்டிய நிலை உள்ளது. இதனால், வரும் 31.5.2018-ம் ஆண்டுக்குப்பிறகு 99 சதவிகித பள்ளிகள் அங்கீகாரமில்லாத சூழல் ஏற்படும். அங்கீகாரத்தைப் புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளோம். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!