வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (10/05/2018)

கடைசி தொடர்பு:16:20 (10/05/2018)

போலீஸ் தேடுதல் வேட்டை! மூதாட்டி கொலையில் ஊரைக் காலி செய்த மக்கள்

மூதாட்டியை அடித்துக்கொன்ற வழக்கில் 20 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், மேலும் சிலரை தேடி வருகின்றனர். பலர் ஊரை காலி செய்துவிட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த அத்திமூர் கிராமத்தில் குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த ருக்குமணி, சந்திரசேகரன், மோகன்குமார், வெங்கடேசன், கஜேந்திரன் ஆகிய 5 பேரை, குழந்தைக் கடத்த வந்ததாக எண்ணி அப்பகுதி மக்கள் மிகக் கொடூர தாக்குதலை அவர்கள்மீது நடத்தினர். இதில் ருக்குமணி (65) மூதாட்டி பலியானர். 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர். இந்தத் தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை கைப்பற்றி தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வருகிறது போலீஸ்.

அத்திமூர் கிராமமே இப்போது போலீஸ் வளையத்தில் உள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வது தெரிந்து, நம்மையும் கைது செய்துவிடுவார்களோ எனப் பயந்து பெரும்பாலானோர் பக்கத்தில் உள்ள காடுகளில், வயல்வெளி, பம்புசெட்டுகளில் தலைமறைவாக உள்ளனர். சிலர், உறவினர்கள் இருக்கும் ஊர்களுக்கு இரவோடு இரவாகச் சென்றுள்ளனர். காடுகள், பம்புசெட்டுகளில் பதுங்யிருப்பவர்களுக்கு அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் மூலம் இரவு நேரத்தில் உணவு கொண்டுச் செல்லப்படுகிறது. இதனால் அத்திமூர் கிராம மக்கள் கைது பீதியில் வெளியில் நடமாட்டம் இல்லாமல் கிராமமே மயான அமைதியாக உள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை எஸ்.பி.பொன்னி கூறுகையில், `இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்தக் குழந்தையும் கடத்தப்படவில்லை. குழந்தையைக் கடத்த வந்ததாக நினைத்து தாக்குதல் நடத்தியதில் ஓர் உயிர் பரிபோனது வருத்தம் அளிக்கிறது. உண்மையில் அவர்கள் குழந்தைதான் கடத்த வந்தார்களா என விசாரிக்காமல், அவர்கள் சொல்ல வந்ததையும் காதில் வாங்காமல் அவர்கள்மீது தாக்குதல் நடத்தியது தவறு. அவர்களைப் போலீஸில் ஒப்படைக்காமல் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் வரும் பொய்யான தகவலை உண்மை என்று நம்பி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை 65 பேரை கைது செய்து உள்ளோம். அதில் பயங்கரத் தாக்குதல் நடத்திய 20 பேர்மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும், குழந்தை கடத்துவதாகச் சொல்லி முதலில் சத்தம் போட்டு இந்த அளவுக்கு விபரீதத்தை உண்டாக்கிய நீலா என்ற பெண்ணையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறோம்’ என்றார். 

மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் வதந்திகளை நம்பாமல் இருக்கவும் மாவட்டத்தில் இருக்கும் அனைத்துக் காவல் நிலையங்கள் மூலமாகத் துண்டு பிரசாரமும் ஒலிபெருக்கி மூலம் விழிப்பு உணர்வு பிரசாரமும் செய்ய உத்தரவிட்டுள்ளேன். அதன்படி அனைத்து கிராமங்களிலும் போலீஸ் வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மூலம் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்து வருகிறோம்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க