மகனைக் கொன்றதாக எழுத்தாளர் சௌபா கைது! - பின்னணி என்ன?

மதுரை கோச்சடை டோக் நகரில் வசித்து வரும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சௌபா என்ற சௌந்திரபாண்டியன் அவர் மகன் விபினைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கொலையில் அவருக்கு உதவியதாக மேலும் இருவரையும் கைது செய்துள்ளது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ். 

செளபா

சௌபாவின் மனைவி லதா பூரணம் கோவில்பட்டி கல்லூரியொன்றில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் ஒரே மகனான விபின் சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் முதுகலைப் படிப்பு முடித்துள்ளார். எங்கும் வேலை செய்யவில்லை. தந்தை அல்லது தாயுடன் மாறி மாறி வசித்து வந்துள்ளார். பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்பது, நண்பர்களுடன் எங்கேனும் சுற்றிக்கொண்டே இருப்பது என இருந்திருக்கிறார்.

இந்நிலையில், சில நாள்களாக லதாவை விபின் சந்திக்க வரவில்லை. அதனால் செளபாவிடம் ’விபின் எங்கே?’ என்று விசாரித்திருக்கிறார் லதா. தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் செளபா. பல இடங்களிலும் தேடிக் கிடைக்காததால், ’மகனைக் காணவில்லை. என் கணவர் மீது சந்தேகமாக உள்ளது' என்று லதா கடந்த 5-ம் தேதி மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். விசாரிக்கத் தொடங்கிய போலீஸார் நேற்று காலை சௌபாவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ’மகனைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று முதலில் கூறியவர், பின்பு போதை அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் விபினைச் சேர்த்ததாகக் கூறியுள்ளார்.

இதனால் அவர் மீது சந்தேகம் உண்டாகியிருக்கிறது. விபினின் செல்போனை சௌபா வீட்டில் கைப்பற்றிய போலீஸ், சௌபாவிடம் அது தொடர்பாக இறுக்கமான விசாரணை மேற்கொண்டனர். ``தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால், ஆத்திரத்தில் அவனைக் கம்பியால் அடித்தேன். அடிபட்டதில் இறந்து விட்டான். யாருக்கும் தெரியாமல் உடலை கொடை ரோட்டில் இருக்கும் என் தோட்டத்தில் எரித்துவிட்டேன்" என்று செளபா கூறியதாகத் தெரிவிக்கின்றனர் போலீஸார். செளபா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய தோட்டத்தில் வேலை செய்த இருவரையும் கைது செய்துள்ளனராம். விரைவில் செளபாவை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளது போலீஸ்.    

பத்திரிகையாளராகப் பணிபுரிந்த சமயம் உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்களைக் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் பழக்கம் குறித்து விரிவாக எழுதினார் செளபா. அது உலகளவில் அதிர்ச்சியலைகளைப் பரப்பியது. தொடர் நிகழ்வுகளாக பெண் சிசுக்களைக் காப்பாற்றும் முயற்சிகளையும் விழிப்பு உணர்வுகளையும் அரசு இயந்திரம் முடுக்கிவிட்டது. பளியர்கள் வாழ்க்கை, குண்டுப்பட்டி கலவரம் என பல சமூகக் கொடுமைகள் குறித்து பதற வைக்கும் அதிர்ச்சிகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் போலீஸாருக்கு பெரும் சவால் விடுத்த சீவலப்பேரி பாண்டியின் வாழ்க்கைக் கதையை இவர் தொடராக எழுதினார். அது பின்னர் திரைப்படமாகவும் உருவெடுத்தது.   

செளபா வேறு சமூகத்தைச் சேர்ந்த லதாவை காதல் திருமணம் புரிந்தவர். மகன் விபின் பிறந்த பிறகு தம்பதிக்கிடையே மனவேற்றுமை உண்டாக, இருவரும் பிரிந்துவிட்டனர். விபின் சென்னையின் பிரபல கல்லூரியொன்றில் படித்தார். அப்போதே பல சர்ச்சைகளில் சிக்கியதாக நண்பர்கள் தரப்பில் சொல்கின்றனர். இதனாலேயே அவருக்கும் செளபாவுக்கு இடையே மனவருத்தம் நிலவியது. மகன் என்று பொறுமையாக இருந்தாலும், ஒருகட்டத்துக்குப் பின் செளபாவாலும் மகனின் நடத்தையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. அது இப்போது கொலை அளவுக்கு முடிந்திருக்குமா, வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற ரீதியில் தொடர்கிறது போலீஸ் விசாரணை!.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!