தினகரனுக்கு கூட்டம் கூட்டிய மேலூர் ஆர்.சாமி மரணம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தினகரனின் ஆதரவாளரான மேலூர் ஆர்.சாமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாமி

மதுரை மாவட்டத்தில் அதிக கிராமங்களைக் கொண்டது மேலூர் தொகுதி. அமைச்சர் பூசாரி கக்கன் இந்தத் தொகுதியில்தான் எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றினார். தொடர்ந்து காங்கிரஸ் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதி பின்னர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கைகளுக்குச் சென்றது. தற்போது தொடர்ந்து அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்துவருகிறது. இங்கு ஆர்.சாமி தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தார். மேலூரின் செல்லப்பிள்ளை என்ற பட்டப் பெயரோடு வலம்வந்த சாமி, கிராமம்தோறும் கலையரங்கம், பேருந்து நிறுத்தம், தண்ணீர் தொட்டி என்று பல திட்டங்களை மேலூர் மக்களுக்குச் செய்தார்.

ஜெயலலிதா இருக்கும்போது அவரது பிறந்தநாளுக்கு 10,000 பேர்களுக்கு மேல் பிரியாணி வழங்குவது இவரது தனி ஸ்டைல். தற்போது டி.டி.வி.தினகரனுக்கு அச்சாரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தொடங்கி, தினகரன் ஆரம்பித்த கட்சியின் தொடக்க விழா வரை மேலூரில் தொடங்கி வைக்க காரணமாக விளங்கினார். டி.டி.வி.தினகரனின் மிகவும் நெருக்கமாக இருந்து வருந்தார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சாமி, பல மாதங்களாகச் சிகிச்சை பெற்றுவந்தார். நோயால் பாதிக்கப்பட்ட பிறகும் கட்சிக்காகத் தொடர்ந்து உழைத்தார். உடல்நிலை மிகவும் பாதிப்படைந்த நிலையில் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சாமி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 12.30 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் மேலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு டி.டி.வி.தினகரன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!