வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (10/05/2018)

கடைசி தொடர்பு:16:23 (10/05/2018)

பெண்களுக்கு டிரைவிங்... மாணவர்களுக்கு விளையாட்டு - சென்னையில் இப்படியும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் 

போலீஸ் இன்ஸ்பெக்டர்

 சென்னை கண்ணகி நகர் பகுதியில் பெண்களுக்கு கார் டிரைவிங் பயிற்சியும் மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சியும் அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார். 

 சென்னை மாநகர காவல்துறையின் ரெட் அலெர்ட் பட்டியலில் துரைப்பாக்கம், கண்ணகி நகர் உள்ளது. இந்தப் பகுதியில் குற்றப் பின்னணிக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்களின் குழந்தைகளை நல்வழிப்படுத்த காவல்துறை பல நடவடிக்கைகளை  எடுத்துவருகிறது. இதற்காக உதவிக் கரத்தை சென்னை காவல்துறை நீண்ட காலமாக நீட்டிவருகிறது. 

அடையாறு போலீஸ் துணை கமிஷனராக இருந்த சுந்தரவடிவேல், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுத்து அவர்கள் பள்ளிக்குச் செல்ல நடவடிக்கை எடுத்தார். அப்போது, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த விவேகானந்தனும் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். இவர்கள் இருவரும் இடமாற்றப்பட்டப் பிறகு கண்ணகி நகர் பகுதி இளைய தலைமுறையினர் மீது கவனம் செலுத்தியிருக்கிறார் தற்போதைய அடையாறு துணை கமிஷனர் ரோஹித்நாதன். அவரின் உத்தரவின்பேரில் கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தன்னுடைய சொந்தக் குழந்தைகளைப்போல பள்ளி மாணவர்களுக்கு பல உதவிகளை செய்துவருகிறார். 

போலீஸ் இன்ஸ்பெக்டர்

கண்ணகிநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் நடுவில் காவல் சிறார் மன்றம் செயல்படுகிறது. கோடை விடுமுறையிலும் மாணவ, மாணவிகள் நேர்த்தியாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கத்தில் விளையாட்டு பயிற்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் எல்லாம் ஆயிரம் வாட்ஸ்  மகிழ்ச்சி அப்பியிருந்தது. 

 கபடி விளையாட்டுக்காகப் பயிற்சியில் ஈடுபட்ட வீரர் அனிதாவிடம் பேசினோம். 

"கண்ணகி நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து முடித்துள்ளேன். தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு விளையாட்டு மீது ஆர்வம் அதிகம். வாலிபால் போட்டியில்தான் முதலில் சேர்ந்தேன். சில காரணங்களுக்காகக் கபடியில் சேர்ந்தேன். 8-ம் வகுப்பு முதல் விளையாடிவருகிறேன். கடந்த ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம்பெற்றேன். அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்று, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தோம். என்னுடைய லட்சியமே இந்திய கபடி அணியில் சேர வேண்டும். அதற்காக என்னைத் தயார்படுத்திவருகிறேன்" என்றார் நம்பிக்கையுடன்.  

கண்ணகிநகர் போலீஸ் பாய்ஸ் கிளப்பின் பொறுப்பாளர் தமிழ் அழகனிடம் பேசினோம். "கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்தக் கிளப் தமிழ் அழகன்செயல்பட்டுவருகிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த திரிபாதி சார்தான் இந்தக் கிளப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதன் பிறகு, கிளப்பின் மூலம் மாணவர்களுக்கு டியூசன், கம்ப்யூட்டர், விளையாட்டு, ஆங்கில மொழி பேசும் பயிற்சி ஆகியவை அளித்துவருகிறோம். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சார், கண்ணகி நகருக்கு வந்த பிறகு, கிளப்பின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டன. அதாவது, கிளப்பில் மாணவ, மாணவிகள் படிக்க ஏ.சி, டைல்ஸ் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார். ஹெச்.சி.எல். பவுண்டேசன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியால்தான் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை கோடைப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்த பிறகு, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், பெண்கள் கபடி அணி வெற்றி பெற்றது. ஆண்கள் கால்பந்து அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 
இந்தப் பயிற்சியின் மூலம் கண்ணகி நகர் மாணவ மாணவிகளின் வாழ்க்கை நடைமுறையே மாறிவிட்டது. முன்பெல்லாம், குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்கூட இன்று ஆங்கிலம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர். இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். 

 இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பேசினோம். "கண்ணகி நகரில் உள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கருதி இத்தகைய முயற்சிகளை சென்னை மாநகரக் காவல்துறை செய்துவருகிறது. ஆர்வமாக மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். பாய்ஸ், கேர்ள்ஸ் கிளப்புக்கு வராதவர்களுக்குக்கூட கிரிக்கெட் விளையாட உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளோம். இதனால் காலை, மாலை நேரங்களில் கண்ணகி நகர் பகுதி விளையாட்டு உலகமாகக் காட்சியளிக்கும். தினமும் காவல் நிலையத்துக்கு வரும் சிறுவர்கள் தயக்கமின்றி எங்களுடன் பேசுகின்றனர். டீமில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்தால்கூட உடனடியாக அவர்கள் குறித்து விசாரிப்பேன். 

போலீஸ் இன்ஸ்பெக்டர்


கண்ணகி நகர் பகுதியில் பெண்கள், வேலைவாய்ப்பின்றி சிரமப்படுவதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக மாருதி நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்டமாக 30 பெண்களுக்கு கார் டிரைவிங் பயிற்சியை இலவசமாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் விவரங்கள் அனைத்தும் போக்குவரத்து துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எல்.எல்.ஆர் அடுத்த வாரத்தில் கிடைத்துவிடும். அதன் பிறகு, தினமும் டிரைவிங் பயிற்சி அளித்து சுயமாகச் சம்பாதிக்க அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இந்த முதல் பேட்ஜ் முடிந்தவடன் அடுத்த பேட்ஜுக்கு டிரைவிங் கற்றுக்கொடுக்கப்படும். காவல் பணியோடு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டால், குற்றங்கள் குறையும்" என்றார்.