`ராஜினாமா எதற்கும் தீர்வாகாது' - முதல்வர் நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி

``ராஜினாமா செய்வது எதற்கும் தீர்வாகாது” என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமிக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

கிரண்பேடி

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “ஆளுநர் கிரண்பேடி அமைச்சரவை நிர்வாகத்தில் தலையிடுகிறார். அதிகாரிகளை நேரடியாக அழைத்து உத்தரவுப் பிறப்பித்து நலத்திட்டங்களைத் தாமதப்படுத்தி வருகிறார் என அவர்மீது குற்றம் சுமத்தியிருந்தேன். அது தொடர்பாக அவருக்கு 11 கடிதங்களையும் எழுதியிருக்கிறேன். ஆனால், அந்தக் கடிதங்களுக்கு நேரடியாகப் பதில் அளிக்காத அவர் நானும் அமைச்சர்களும் பல மாதங்களாகக் கோப்புகளைத் தேக்கி வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இவர் எடுத்த முடிவை மத்திய அரசு மூன்று முறை நிராகரித்துள்ளது. இதிலிருந்தே அவருக்கு நிர்வாகம் தெரியவில்லை என்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கிறது. இதற்கு முன் உதாரணமாகக் கடந்த காலங்களில் ஆளுநரின் முடிவுகளை மத்திய அரசு ரத்து செய்தபோது அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். எனவே, அதேபோல ஆளுநர் கிரண்பேடியும் தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதல்வர் நாராயணசாமிக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில், ``பதவியை ராஜினாமா செய்வது எதற்கும் தீர்வு கிடையாது. மக்கள் தன்னைத் தேடி வந்து குறைகளைக் கூறி தீர்வு காண்கிறார்கள். 2 ஆண்டுகளாய் வார இறுதி நாள்களில் தொடர்ச்சியாக மக்களைச் சந்திக்கிறேன். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்குப் பாடுபடுவதற்கு ராஜினாமா மட்டுமே தீர்வல்ல. தன்னுடன் இணைந்து செயல்படுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!