வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் வதந்தி பரப்பினால் குண்டாஸ்! எச்சரிக்கும் எஸ்பி

வேலூர் எஸ்பி பகலவன்

குழந்தை கடத்தல் தொடர்பாக  வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் வதந்தி பரப்புவோர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என வேலூர் மாவட்ட எஸ்.பி. பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தைகள் கடத்தப்படுவதாகக் கூறி வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் வடமாநில இளைஞர்கள் மற்றும் பெண்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் பகுதியில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களை, குழந்தை கடத்த முயன்றதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தாக்கியதில் சென்னையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போன்று வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், வேலூரில் ஒரு சில இடங்களில் குழந்தை கடத்துவதாகக் கூறி வடமாநில இளைஞர்களைத் தாக்குவதும் நடந்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் இன்று ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ``வேலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தப்படுவதாகத் தகவல் தெரிந்தால் உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கவேண்டும். யாரும் சட்டத்தை தன் கையில் எடுக்கக் கூடாது. குறிப்பாக வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் தவறாக வதந்திகள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் மற்றும் குண்டர் சட்டத்தில் கைதும் செய்யப்படுவார்கள்" என எச்சரித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!