நிர்மலா தேவி வழக்கு: சந்தானம் விசாரணை அறிக்கையை வெளியிடத் தடை! | Madras HC directs TN Govt to keep in a sealed cover of Sandhanam's report

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (10/05/2018)

கடைசி தொடர்பு:18:20 (10/05/2018)

நிர்மலா தேவி வழக்கு: சந்தானம் விசாரணை அறிக்கையை வெளியிடத் தடை!

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் சந்தானம் அறிக்கையை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றம்

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுக்குத் தவறான வழிகாட்டியதாகக் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் நிர்மலா தேவி, பேராசியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணை நடத்துவார் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். அதன்படி, அவர் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 

ஆளுநர் அமைத்த விசாரணை அதிகாரி சந்தானத்தின் விசாரணைக்குத் தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரி மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, கணேசன் என்பவர், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி கூடுதல் மனுத்தாக்கல் செய்தார். 

தமிழக அரசு தரப்பில், ``மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தரின் வேண்டுகோளை ஏற்றுதான் ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆளுநரின் அதிகாரத்துக்குட்பட்டே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று வாதிடப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முடித்து வைக்கப்பட்ட வழக்கு குறித்த விவரங்களைத் தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், ``இந்த வழக்கில் சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவுப் பிறப்பிக்கவில்லையென்றால், சந்தானம் விசாரணை அறிக்கை வெளியாக வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு வெளியானால், அது வழக்கின் விசாரணையை வேறு கோணத்துக்கு மாற்றும் சூழல் இருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சந்தானம் விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத் துணை வேந்தரிடம் தாக்கல் செய்யும்பட்சத்தில் அதை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டது. வழக்கை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், சந்தானம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், அதை சீலிட்ட உறையில் வைக்கவும் உத்தரவிட்டது.